மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தணிக்கை குழு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நடிகர் விஷால் இன்று (நவம்பர் 28) சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் நடிகர் விஷால் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு ரூ.6.5 லட்சத்தை இரண்டு தவணையாக கொடுத்தேன்.
இனி வரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இது போன்ற ஒரு நிலைமை வரக்கூடாது” என்று பேசியிருந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து விஷாலின் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி மும்பை சென்று விசாரணை நடத்தினார். மேலும் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வருக்கு விஷால் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. சிபிஐ, தரகர்கள் மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்ட சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் கடந்த மாதம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஷால் இன்று நேரில் ஆஜரானார். அவரோடு அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணனும் ஆஜராகியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
உதயநிதியை விஜய் வாழ்த்தவில்லையா, ஏன்?
IPL2024: மும்பை இந்தியன்ஸை அன்பாலோ செய்த பும்ரா… ஹர்திக்கால் அணிக்குள் வீசும் புயல்?