”ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை” : நடிகர் விஷால்

Published On:

| By Manjula

புதிய அரசியல் கட்சியை இன்று(பிப்ரவரி 7) தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் விஷால் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் போன்று நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்கி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், போட்டியிடப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.

மேலும் இதுதொடர்பான அறிவிப்பை இன்று காலை விஷால் வெளியிடுவார் எனவும் கூறப்பட்டது. இதற்கு ஏற்றவாறு முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவும் விஷால் ஆர்வம் காட்டி இருந்தார்.

இந்தநிலையில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு நடிகர் விஷால் தற்போது விளக்கம்  அளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அன்புடையீர் வணக்கம், சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

“இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துகொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்”, என தெரிவித்துள்ளார்.

விஷாலின் இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுப முகூர்த்தம் எதிரொலி : தங்கம் விலை அதிரடி உயர்வு!

U19 World Cup: ‘நாங்க வேற மாதிரி’ 5-வது முறையாக… இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel