லைகா வழக்கு: 150 கேள்விகள்… நீதிமன்றத்தில் 2 மணி நேரம் பதிலளித்த விஷால்

சினிமா

தென்னிந்திய நடிகர்கள் சங்க செயலாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிகளில் இருக்கிறவர் நடிகர் விஷால்.

மற்றவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பஞ்சாயத்து பேச வேண்டியவர் அவரே நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணைக்கு கூண்டில் 150 நிமிடங்கள் நின்று 150 கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழலுக்கு உள்ளானார்.

விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக மதுரையை சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.

இந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் படங்களின் உரிமைகளை தங்களுக்கே வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாக கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா புராடக்ஷன்ஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்த அடிப்படையில் ஜூலை 1 ஆம் தேதி ஆஜரானார்.

முதல் நாள் நடைபெற்ற குறுக்கு விசாரணையின் போது நீதிமன்ற சம்பிரதாய நடைமுறைகளை கடைபிடிக்காமல் சினிமா சூட்டிங்கில் பேசுவது போன்று பேசி நீதிபதியின் கண்டிப்புக்கும், எச்சரிக்கைக்கும் உள்ளானார் நடிகர் விஷால்.

விசாரணை முடிவடையாத நிலையில் நேற்று(02.08.2024) குறுக்கு விசாரணைக்காக நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

விஷாலிடம் லைகா நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, திரைப்படத் துறையில் படத்தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு எவ்வளவு சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது என்றும், லைகா நிறுவனத்துக்கு எதிராக விஷால் தொடர்ந்த வழக்கு உள்பட மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விஷால் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பதிலளித்தார்.

இந்த வழக்கில் குறுக்கு விசாரணை முடிவடைந்தது. அடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி பி.டி.ஆஷா வரும் செப்டம்பர் 9-க்கு தள்ளி வைத்துள்ளார்.

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியா உணவு மிகை நாடு : வேளாண் மாநாட்டில் மோடி பேச்சு!

“அவர்களே ஒரு பேரிடர்தான்” : பாஜக அரசை விமர்சித்த கனிமொழி

நீலகிரியில் கனமழை : வானிலை வார்னிங்!

ஹெல்மெட்டுக்கு நோ… இர்ஃபானுக்கு செக் வைத்த போலீஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0