ரத்னம் படத்தினை வெளியிட விடாமல் சிலர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக நடிகர் விஷால் இன்று (ஏப்ரல் 25) குற்றஞ்சாட்டியுள்ளார்.
நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் படம் ‘ரத்னம்’. ஜனவரி மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, நாளை (ஏப்ரல் 26) உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது.
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. மேலும், ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34வது திரைப்படமாகும்.
இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு போன்ற பலர் நடித்துள்ளனர். ரத்னம் படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், ரத்னம் திரைப்படத்தின் நடிகருமான விஷால் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் பேசுகிறேன். திருச்சி, தஞ்சாவூர் ஏரியாக்களில் ரத்னம் படம் வெளியாவதில் இருக்கும் சிக்கல் தொடர்பாக சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் ஆகியோரிடம் பேச தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். ஆனால், என்னுடைய போனை அவர்கள் எடுக்க மறுக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியாவதே மிகப்பெரிய விசயம். இந்த சூழலில் நீங்கள் இப்படி செய்வதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.
இதன் மூலம் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது, அவர்கள் செய்வது கட்டபஞ்சாயத்து தவிர்த்து வேறு எதுவும் இல்லை.
எனக்கே இந்த நிலைமை என்றால் ஒரு புதுமுக நடிகருக்கு என்னவெல்லாம் பிரச்சனை வரும் என்று யோசித்து பாருங்கள்.
நீங்கள் போன் எடுக்காமல் இருப்பதும், தியேட்டர் கொடுக்காமல் இருப்பதும் உங்களுடைய அலட்சியம். அந்த அலட்சியத்தை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்” என நடிகர் விஷால் பேசியுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு தர முடியாது : விஜயபாஸ்கர் வழக்கில் வாதம்!
வெறுப்புப் பேச்சு : மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!