நடிகர் விக்ரம், சக நடிகர்களான கார்த்திக், ஜெயம் ரவி, நடிகை திரிஷா ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
கல்கியின் வரலாற்று நாவலைத் தழுவி உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.
அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்தகரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கந்தமாறனாக விக்ரம் பிரபு, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், ரவிதாஸாக ’ஆடுகளம்’ கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
’பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 8ஆம் தேதி நடைபெற்றது. பாடல்கள் மற்றும் டிரைலர் செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்றது.
ஏற்கெனவே டீசர் மற்றும் ’பொன்னி நதி பார்க்கணுமே’, ’சோழா… சோழா’ ஆகிய பாடல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ’பொன்னியின் செல்வன்’ படம் தற்போது டிரைலர் வெளியீட்டால் மேலும் அதிக எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டரில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன்.
எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.
என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என பதிவிட்டிருக்கும் விக்ரம், அந்த பதிவில் கார்த்தி, த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியை டேக் செய்துள்ளார்.
இதற்கு அவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. அதேநேரத்தில், அவர்கள் பதிவிடும் இனி ஒவ்வொரு ட்விட்டுமே படத்துக்கு ப்ரமோஷன்தான்.
ஜெ.பிரகாஷ்
பொன்னியின் செல்வன் திரைப்படம்: எதிர்பார்ப்புகள், சர்ச்சைகள், விவாதங்கள்…