varisu movie review

வாரிசு: விமர்சனம்!

சினிமா

நள்ளிரவில் கண் விழித்து, பேனர் கட்டி, ஆட்டமாடி பாட்டுப் பாடி, கோலாகலமாகத் திரையரங்கினுள் நுழைந்து, திரையின் முன் திருஷ்டி சுற்றித் தனது தானைத் தலைவரை வரவேற்காத நட்சத்திரங்களின் ரசிகர்கள் உண்டா?

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் அதிகாலை காட்சியில் அனைத்தையும் காண முடிந்தது அவரது ரசிகர்களின் தயவால். இருபதுகளிலும் முப்பதுகளிலும் இருக்கும் அந்த ரசிகர்களுக்கு விஜய்யின் ரொமான்ஸும் ஆக்‌ஷனும் கலந்த நடிப்பு மிகவும் பிடிக்கும்.

’திரையரங்கிலே திருவிழா’ என்பது போலக் கூடும் குடும்பத்தினருக்கு, முக்கியமாக விஜய்யின் ரசிகைகளுக்கு ‘சென்டிமெண்ட்’ காட்சிகள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ‘வாரிசு’ படம் விஜய்யின் ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்துகிறதா அல்லது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்திருக்கிறதா?

ஒரு பேமிலி ஸ்டோரி!

‘ஒரு ஊர்ல ஒரு தொழிலதிபர் இருந்தாராம்..’ என்கிற ரேஞ்சில் எடுத்தவுடனேயே ராஜேந்திரன் (சரத்குமார்) என்பவரின் வர்த்தக சாம்ராஜ்யம் காட்டப்படுகிறது. அவரது தொழில்கள் அனைத்தையும் மகன்கள் ஜெய் (ஸ்ரீகாந்த்), அஜய் (ஷாம்) இருவரும் கவனித்துக் கொள்கின்றனர். மூன்றாவது மகன் விஜய் (விஜய்) வீட்டில் இல்லை.’ அப்பா கம்பெனியில வேலை பார்க்க பிடிக்கல’ என்று சொல்லிவிட்டு மும்பை சென்றுவிடுகிறார்.

ஆனாலும் ஏழு ஆண்டுகள் கழித்தே ஒரு ‘ஸ்டார்ட்அப்’ தொடங்குகிறார். அதற்கான முதலீட்டாளர்களை தேடிக் கொண்டிருக்கையில், ‘அறுபதாம் கல்யாணம்’ என்று விஜய்க்கு அழைப்பு விடுக்கிறார் அவரது தாய் (ஜெயசுதா).

varisu movie review

தந்தைக்காக இல்லாவிட்டாலும், பாரபட்சம் காட்டாமல் அன்பு மழை பொழியும் தாய்க்காக வீடு திரும்புகிறார் விஜய். வந்த இடத்தில், தங்களது சுயலாபங்களுக்காக அஜய்யும் ஜெய்யும் நிறுவனத்தை விட்டுக்கொடுத்தது தெரிய வருகிறது. இந்த நிலையில், ராஜேந்திரன் தனக்கு கொஞ்சமும் பிடிக்காத இளைய மகன் விஜய்யை தனது நிறுவனத்தின் தலைவராக நியமிக்கிறார்.

திடீரென்று விஜய்யை தலைவராக்க காரணம் என்ன, சகோதரர்களின் பிளவு பெரிதானதா அல்லது அனைவரும் ஒன்றிணைந்தார்களா என்ற கேள்விக்கு பதில் தருகிறது ‘வாரிசு’. மேற்சொன்ன தகவல்களில் இருந்தே இது ஒரு ‘குடும்பக் கதை’ என்று புரிந்திருக்கும்.

இப்படத்தில் விஜய் என்ற பெயரிலேயே வருகிறார் நடிகர் விஜய். பிரிந்து கிடக்கும் தனது குடும்பத்தை விஜய் ஒன்று சேர்ப்பாரா இல்லையா என்பதற்கான விடையைச் சிறு குழந்தை கூட சொல்லிவிடும். அதையும் மீறி, ஆங்காங்கே நம் கண்ணில் நீர் வழியும் அளவுக்கு ‘சென்டிமெண்டை’ நிரப்பி அனுப்பியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் வம்சி பைடிபல்லி.

விஜய் சாம்ராஜ்யம்!

என்னதான் குடும்பக் கதை என்று சொன்னாலும், பெரும்பாலான காட்சிகளில் விஜய் மட்டுமே வருகிறார். அதனால், ‘வாரிசு’ விஜய்யின் சாம்ராஜ்யம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

varisu movie review

அதுதான் இப்படத்தின் பலம் என்பதோடு பலவீனமாகவும் இருக்கிறது. அவரைத் தவிர்த்து சரத்குமார், ஜெயசுதாவுக்கு மட்டுமே ரசிகர்கள் மனதில் பதிய இடம் தரப்பட்டிருக்கிறது. நாயகி ராஷ்மிகா மந்தனா நான்கைந்து காட்சிகள், இரண்டொரு பாடல்களில் நடையைக் கட்டிவிடுகிறார்.

varisu movie review

தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துக்கு தமிழில் நல்ல அறிமுகமாக இப்படம் அமைந்திருக்கிறது. அடுத்தடுத்த வாய்ப்புகள் அமைந்தால், அவருக்கு தமிழில் நல்ல குணசித்திர பாத்திரங்கள் கிடைக்கலாம்.

ஷாமுக்கும் அப்படியே. யோகிபாபுவின் பாத்திரம் ‘க்ளிஷே’வாக இருப்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும், ஆங்காங்கே விஜய்யுடன் அவர் அடிக்கும் லூட்டி சிரிக்க வைத்திருப்பது நல்ல விஷயம்.

சங்கீதா கிரிஷ், சம்யுக்தா போன்றவர்கள் திரையில் வந்து போயிருக்கின்றனர். ஜெயபிரகாஷ் எனும் வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். சரத்குமாரின் நண்பராக வரும் பிரபு, வழக்கம்போல தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா வரும் காட்சி ரசிகர்களை குஷிப்படுத்தியபோதும், கௌரவ தோற்றத்தில் குஷ்பு இடம்பெறுவதாகச் சொல்லப்பட்ட காட்சி ஏனோ படத்தில் வெட்டப்பட்டிருக்கிறது. படத்தின் நீளம் காரணமாக இருக்கலாம்.

பாசம், வெறுமை, கோபம் போன்றவற்றை வெளிப்படுத்தும்போது விஜய்யின் நடிப்பு ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. அதேநேரம், தன் முகத்தில் முதுமை படர ஆரம்பித்திருப்பதை கொஞ்சம் அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெயசுதாவுக்கு உணவூட்டும் காட்சியிலும், சரத்குமார் உடன் காரில் பேசும் காட்சியிலும் நிச்சயம் அவர் நடிப்பு ரசிகர்களைக் கண் கலங்க வைக்கும்.

இந்த வயதிலும் விஜய் ஆடும் ஆட்டத்திற்கு திரையரங்கமே குலுங்குவதை மறுக்க முடியாது. ஆனாலும் கொஞ்சமும் பொருத்தமற்ற சண்டைக்காட்சிகள் மட்டுமே ரசிகர்களை கேண்டீன் பக்கமாக ஒதுங்கச் செய்வதாக உள்ளது. தெலுங்கு பட பாணியில் ‘பைட்’ பண்ணது போதும் என்று விஜய்யிடம் யாராவது சொன்னால் தேவலை!

varisu movie review

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, படத்தொகுப்பாளர் பிரவீன் கேஎல்லின் கூட்டுழைப்பு ஒவ்வொரு பிரேமையும் ‘ஸ்டைலிஷ்’ ஆக காட்ட உதவியிருக்கிறது. அந்த பிரேம்களில் ரசிகர் பட்டாளம் விஜய்யை வாழ்த்தி வரவேற்கும் அளவுக்குப் பின்னணி இசை தந்திருக்கிறார் தமன்.

பாடல்கள், வசனம் மட்டுமல்லாமல் இயக்குனர் வம்சி பைடிபல்லி உடன் இணைந்து திரைக்கதையிலும் பங்களிப்பைத் தந்திருக்கிறார் விவேக். நிச்சயம் அவரது வசனங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும். திரையுலகம், குடும்பம், ரசிகர் மன்றம், அரசியல் எதிர்பார்ப்பு என்று விஜய் எதிர்கொள்ளும் ஒவ்வொரு உலகத்தையும் தொடும் வகையில் அவ்வசனங்கள் அமைந்திருக்கின்றன. அதுவே அடுத்தடுத்த விஜய் படங்களில் அவருக்கு வாய்ப்பு உறுதி என்பதைச் சொல்லிவிடுகிறது.

இப்படத்தின் கதையை ஹரி, அசிஷோர் சாலமோன் ஆகியோரோடு இணைந்து எழுதியுள்ளார் வம்சி. அதற்கான முன்னேற்பாடாக எத்தனை சீரியல்களை பார்த்தார்கள் என்று தெரியவில்லை.

ஒரு குடும்பம், அதற்குச் சொந்தமான வணிகம், தொழில் போட்டி, அனைத்துக்கும் நடுவே குடும்ப உறுப்பினர்களை நிறுவன நிர்வாகிகள் போன்று நடத்தும் ஒரு குடும்பத்தலைவர் என்று ’மையக்கதை’ அமைத்த வகையில் தெலுங்குக்கும் தமிழுக்கும் பொருந்தும் ஒரு களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் வம்சி பைடிபல்லி.

விஜய்யின் ரசிகர்களுக்கு, குழந்தைகள் பெரியவர்களை அழைத்துவரும் குடும்பத்தினருக்கு என்று தனித்தனியாக காட்சிகள் எழுதி அவற்றை ஒன்றாகக் கோர்த்திருக்கிறார். முடிந்தவரை விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ‘இமேஜ்’ உடன் அதனைப் பொருத்த முயற்சித்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் தவிர்த்து மற்றனைத்தும் அவ்விதமாகவே அமைந்திருக்கின்றன.

இடையிடையே காணாமல் போகும் சில பாத்திரங்கள், குடும்பச் சண்டையை விட்டு நிறுவனப் போட்டிக்கு தடம் மாறுதல், விஜய்யின் ஹீரோயிசத்தை தாங்கிப் பிடித்தல் போன்றவையே ஒரு பொழுதுபோக்கு படம் பார்க்க வரும் சாதாரண மக்களை அயர்வுறச் செய்வதாக இருக்கின்றன.

’சீரீயல் மாதிரி இருக்கிறதா’ என்று வாரிசு ட்ரெய்லர் வந்தவுடன் ஒரு பேச்சு கிளம்பியது. ‘அம்மி அம்மி மிதித்து’ என்று ’மெட்டி ஒலி’ சீரியல் பாடலை விஜய் இமிடேட் செய்யும் காட்சி வரும்போது, ரசிகர்கள் ‘ஓ’வென்று கோரஸாக கத்துகின்றனர். பெண்கள் அதிகமாக திரையரங்கில் இருக்க நேரும்போது அக்காட்சிக்கு கைத்தட்டல்கள் கிடைக்கலாம். 

மற்றபடி இந்த படத்தில் இருந்து அவரவர்க்குத் தேவையானதை அவரவர் எடுத்துக்கொள்ளலாம் என்ற கரிசனத்துடன் ’வாரிசு’ படம் தந்திருக்கிறது தில் ராஜு மற்றும் வம்சி கூட்டணி. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

பீஸ்ட் படத்தைத் தாண்டி மாஸ்டர் பட சாதனைகளை வாரிசு வெற்றி முறியடிக்குமா என்பது இரண்டொரு வாரங்களில் தெரிந்துவிடும். குடும்பங்கள் சாரைசாரையாக திரையரங்கில் திரண்டால் அது சாத்தியமாகும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகவும் மாறும்!

உதய் பாடகலிங்கம்

மன்கட் விக்கெட் : ரோகித் சர்மாவை விமர்சிக்கும் ரசிகர்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பா, தீர்வா? தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

திருச்சியில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
3
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.