ஸ்டைலிஷ் அவதார்: விஜய் ஸ்டைலா நடிச்ச படங்களை பார்க்கலாமா?

Published On:

| By Selvam

‘அண்ணே வரார் வழி விடு’ என்ற முழக்கத்தோட வெளியான ‘தி கோட் (தி க்ரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) ட்ரெய்லர், ஒவ்வொரு நாளும் ரசிகர்களோடு ‘vibe’யை அதிகப்படுத்திட்டே வருது. அதுக்கு காரணம், அதுல இருக்குற விஜய்யோட ஸ்டைலிஷான தோற்றங்கள் தான். ’தி கோட்’ல டபுள் ஆக்டிங், வெவ்வேற கெட்டப்ல விஜய் வர்றார்ங்கறது அவரோட ரசிகர்களை ரொம்பவே குஷிப்படுத்தியிருக்கு.

இந்த நேரத்துல, இதுக்கு முன்னால அவர் என்னென்ன படங்கள்ல ஸ்டைலிஷா வந்து போனார்னு திரும்பிப் பார்க்கலாமா?

’நாளைய தீர்ப்பு’ படத்துல அறிமுகமான விஜய்யை, இருபது வயசு துறுதுறுப்போட ‘செந்தூரப் பாண்டி’, ‘ரசிகன்’, ‘தேவா’, ‘விஷ்ணு’ படங்கள்ல பார்த்திருப்போம். அவருக்கு பெரிய வெற்றிப்படமா அமைஞ்சது ‘பூவே உனக்காக’. ஆனா, அதேநேரத்துல தயாரான ‘மாண்புமிகு மாணவன்’ படத்துக்காக அவர் பண்ண ஹேர்கட் அந்த நேரத்துல பயங்கர பாப்புலர்.

பிறகு ‘செல்வா’, ’லவ் டுடே’, ‘நேருக்கு நேர்’ படங்கள்ல வழக்கம்போல கல்லூரி மாணவனா நடிச்சிட்டிருந்த விஜய்யை ஒரு ‘ஜெண்டில்மேன்’னா காட்டிய படம் ‘காதலுக்கு மரியாதை’. அதுல அவரோட ஸ்டைலிங், அதுவரை வெளியான படங்கள்ல இருந்து ரொம்பவே வேறுபட்டு இருந்துச்சு.

தொடர்ந்து அதே தோற்றத்துல துள்ளாத மனமும் துள்ளும், நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவுன்னு நடிச்சிட்டு வந்தார் விஜய். அந்த நேரத்துல அவரோட ட்ரெஸ்ஸிங் ஸ்டைல், மேக்கப்ல கொஞ்சமா வித்தியாசத்தை புகுத்தி, ரொம்பவே ஸ்டைலிஷா காட்டிய படம், எஸ்.ஜே.சூர்யாவோட ‘குஷி’. அந்தப் படம் முழுக்கவே அவரோட ட்ரெஸ்ஸிங் ‘வாவ்’ ரகமா இருக்கும்.

பிறகு பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், பத்ரி, தமிழன், யூத்னு நடிச்சிட்டிருந்த விஜய்யை கொஞ்சம் வேறுமாதிரியான கேரக்டர்ல காண்பிச்ச படம் செல்வபாரதியின் ‘வசீகரா’. அடுத்தபடமான ‘புதிய கீதை’லயும் அப்படித்தான் அவர் வந்து போனார்.

அதுவரை விஜய் பத்தி ரசிகர்கள் வச்சிருந்த பிம்பத்தை ஒட்டுமொத்தமா மாத்தியமைச்ச படம், ரமணா இயக்குனராக அறிமுகமான ‘திருமலை’.

நல்லா ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடி, அளவான தலைமுடி, குண்டாகாத உடல்வாகுன்னு தன்னோட வயசை பாதியா காட்டுற மாதிரி திரையில தோன்றினார் விஜய்.

இதே கெட்டப்ல அவர் நடிச்ச கில்லி, மதுர, திருப்பாச்சி, சிவகாசி எல்லாமே பயங்கர ஹிட். ஆனாலும், அந்த படங்களோட வந்த ‘சச்சின்’ல ஒரு காலேஜ் பாயா, ஹேண்ட்சம்மா திரும்பவும் நடிச்சார் விஜய். இப்போது பார்த்தாலும், அந்த படத்துல அவரோட ஸ்டைலிங் ‘கிளாஸா’ இருக்கும்.

போக்கிரி, அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, சுறான்னு பயணிச்ச விஜய்யை ஒரு குடும்பத் தலைவனா, அழகான அப்பாவாக காண்பிச்சது ‘காவலன்’ பட கிளைமேக்ஸ். அந்த தோற்றம் தான், ‘தி கோட்’ வரைக்கும் விஜய் பாலோ பண்ற ஹேர்ஸ்டைலுக்கான முன்மாதிரி.

பிறகு ‘நண்பன்’ல கொசாகி பசப்புகழா நம் மனசுல விஜய் இடம்பிடிச்சாலும், ‘இதுதான்யா ஸ்டைலிஷ் அவதார்’னு ரசிகர்களை உற்சாகக் கூச்சலிட வச்ச படம், ஏ.ஆர்.முருகதாஸின் ‘துப்பாக்கி’. அதுல அவர் வர்ற ஒவ்வொரு பிரேமும் கண்ல ஒத்திக்கலாம்கற மாதிரி இருக்கும்.

அதேமாதிரி, கொஞ்சம் குண்டான விஜய்யை நாம ‘கத்தி’யில பார்க்க முடியும். அதை நாம கவனிக்கவே இல்லை. காரணம், வயசாக ஆக அவரோட நடிப்பும் நடனத் திறமையும் மெருகேறிக்கிட்டே இருந்த காலம் அது.

அட்லீ இயக்குன ‘தெறி’ படம், விஜய்யே திரும்பப் பார்க்குற அளவுக்கு அவரை புத்துணர்வோட திரையில காட்டியிருக்கும். அதுலயும் நைனிகாவோட அவர் தோன்றுகிற காட்சிகள் அடுத்த தலைமுறை குழந்தைகளும் ரசிக்கும்கற கியாரண்டிய கொடுக்கும்.

2கே கிட்ஸ்களை பொறுத்தவரை, விஜய்யோட ஸ்டைலிஷ் அவதாரங்கள்ல ஒண்ணா ‘சர்கார்’ படத்தைக் குறிப்பிடுவாங்க. ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்குன ‘மாஸ்டர்’ அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிடுச்சு.

விஜய்யோட திரை வாழ்க்கையில, அவர் வகுத்த எல்லைகளை தாண்டி இன்னொரு உயரத்தை தொட வச்ச படம் அது. ‘வயசானாலும் சிங்கம் எப்போதும் சிங்கம்தான்’கற டயலாக்கை சொல்லாம சொன்ன படம் அது.

இப்படி பல படங்கள்ல ஸ்டைலிஷா வந்த விஜய்யை, ஒவ்வொரு காட்சியிலயும் ஸ்டைலா காண்பிச்சிருப்பாரா வெங்கட்பிரபு? இப்படியொரு கேள்வியை நமக்குள்ள எழுப்பியிருக்கு ‘தி கோட்’. நாளைக்கு (செப்டம்பர் 5) அதற்கான பதில் தெரிந்துவிடும்.

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சைக்கிளுக்கு ஃப்ரீ புரொமோசனா : அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி… அச்சாரம் போட்ட வாசன்… அமித் ஷா சொன்ன பதில்!