நடிகர் விஜய் விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான கணக்கு தொடங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதள பக்கங்கள் என்பது சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை எளிதாக ஒன்றிணையும் ஒரு தளமாக உள்ளது. அந்த வகையில் திரை பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் ரசிகர்களுடன் இணைந்து இருக்கின்றனர். படம் தொடர்பான விஷயங்கள், தங்களுடைய சொந்த விஷயங்கள், விளம்பரங்கள், ரசிகர்களுடன் கலந்துரையாடுவது என ஆக்டிவாக இருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வமான முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் படம் தொடர்பான அப்டேட்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். ஆனால் இப்போதுள்ள தலைமுறைக்கு ஆதர்சமாக உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கென தனி பக்கம் இல்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் விரைவில் இன்ஸ்டாகிராமில் தனக்கான பக்கத்தை தொடங்க இருக்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கும் ’வாரிசு’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கிறார். சென்னை மற்றும் ஹைதராபாத் என மாறி மாறி நடக்கும் படத்தின் படப்பிடிப்பு நான்காவது கட்டத்தில் இருக்கிறது. இந்த மாதம் நான்காம் கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஐந்தாம் கட்டப்படப் பிடிப்பு முடிந்து அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாக இருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா, நடிகர் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.