தி கோட்: ராஜபாட்டை காட்டிய ‘டபுள் ஆக்‌ஷன்’ தமிழ் படங்கள்! இரட்டை வேடத்தில் அசத்தும் விஜய்

Published On:

| By Selvam

’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) பட ட்ரெய்லரிலும் சரி, பர்ஸ்ட் லுக்கிலும் சரி, ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்கிய விஷயங்களில் ஒன்று, தந்தையாகவும் மகனாகவும் விஜய் பைக்கில் பயணிக்கும் ஷாட்.

வெவ்வேறு காலகட்டங்கள்ல அந்த இரண்டு கேரக்டரும் செய்யுற ‘டைம் ட்ராவல்’ தான் ’தி கோட்’ படத்தோட ஹைலைட்னு சொல்றாங்க. அதுக்காகத்தான், அமெரிக்கா வரைக்கும் போய் விஜய்யை இளமையா காட்டுறதுக்காக ‘டீஏஜிங்’ டெக்னாலஜியில விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்திருக்கறதாகவும் சொல்றாங்க.

எது எப்படியிருந்தாலும்,  விஜய் இந்தப் படத்துல டபுள் ஆக்‌ஷன்ல கலக்கியிருக்கிறார்ங்கறது தான், அவரோட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தர்ற விஷயம்.

தமிழ்ல பல ஹீரோக்கள் டபுள் ஆக்‌ஷன் படங்கள்ல நடிச்சிருக்காங்க. அதுல பல படங்கள் ‘ப்ளாக்பஸ்டரா’ அமைஞ்சிருக்கு.

சரி, தமிழ்ல வெளியான முதல் டபுள் ஆக்‌ஷன் படம் எதுன்னு தெரியுமா?

அந்த படத்தோட பேரு ‘உத்தமபுத்திரன்’. 1940ஆம் வருஷம் அந்தப் படம் வெளியானது.

அந்தப் படத்துல ஹீரோவா நடிச்சவர் பி.யு.சின்னப்பா. பிறகு குபேர குசேலா, மங்கையர்க்கரசி படங்கள்லயும் இரட்டை வேடங்கள்ல நடிச்சு, இன்னிக்கு பல ஹீரோக்கள் ‘டபுள் ரோல்’ல நடிக்கணும்னு ஆசைப்படுறதுக்கு விதை போட்டவர் அவர் தான்.

சின்னப்பா அமைச்சு தந்த ‘ராஜ பாட்டை’யில பயணிச்ச எம்ஜிஆரும் சிவாஜியும் ‘டபுள் ஆக்‌ஷன்’ படங்களுக்காக தனி ட்ரெண்டையே உருவாக்குனாங்க.

நாடோடி மன்னன் தொடங்கி ஊருக்கு உழைப்பவன் வரைக்கும் 17 படங்கள்ல எம்ஜிஆர் இரட்டை வேடங்கள்ல நடிச்சிருக்கார்.

எங்கவீட்டுப் பிள்ளை, நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், உலகம் சுற்றும் வாலிபன், சிரித்து வாழ வேண்டும், நாளை நமதே, மாட்டுக்கார வேலன், பட்டிக்காட்டு பொன்னையா, நினைத்ததை முடிப்பவன் என்று நீள்கிற அந்த பட்டியல்ல பல படங்கள் சூப்பர்ஹிட் வரிசையில சேரும்.

அடிமைப்பெண் படத்துல மட்டும் அப்பா, மகனா நடிச்சிருப்பார் எம்ஜிஆர்.

சிவாஜியோ 37 படங்கள்ல டபுள் ஆக்‌ஷன்ல கலக்கியிருக்கிறார். பலே பாண்டியா, தெய்வமகன், நவராத்திரி, திரிசூலம் மாதிரியான படங்களை தவிர்த்த கணக்கு இது.

அந்த வரிசையில சிவாஜி முதன்முதலா டபுள் ரோல்ல நடிச்ச படம் ’உத்தமபுத்திரன்’. அதுல வர்ற ‘யாரடி நீ மோகினி’ பாட்டுல சிவாஜி தந்திருக்குற பெர்பார்மன்ஸ் ஸ்டைலுக்கான ஒரு அகராதியா இருக்கும்.

எங்கள் தங்கராஜா, கௌரவம், சங்கிலி, வெள்ளைரோஜான்னு இரட்டை வேடங்கள்ல சிவாஜி நடிச்ச படங்களைப் பத்தி பேசிக்கிட்டே இருக்கலாம்.

எழுபதுகள்ல ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார் போன்ற முன்னணி ஹீரோக்கள் இரட்டை வேடங்கள்ல நடிச்சிருக்காங்க. ஆனால், அதை ஒரு ட்ரெண்டா எண்பதுகள்ல ரஜினியும் கமலும் மாத்துனாங்க.

‘பில்லா’ தொடங்கி 2.0 வரைக்கும் ரஜினி ‘டபுள் ஆக்‌ஷன்’ல நடிச்ச படங்கள் எல்லாமே பொழுதுபோக்கின் உச்சமா இருக்கும்.

போக்கிரி ராஜா, ஜானி, ராஜாதி ராஜா, அதிசயப்பிறவின்னு வெவ்வேறுவிதமா ரஜினி நடிச்சிருந்தாலும், அவர் தந்தை – மகனா அருணாச்சலம், முத்து, லிங்கான்னு சில படங்கள்லயே நடிச்சிருக்கார். அந்த படங்களுக்கு முன்னோடியா அமைஞ்சது, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘நெற்றிக்கண்’. அந்தப் படத்துல மகனை விட, அப்பா கேரக்டர்ல ‘அப்ளாஸ்’களை அள்ளினார் ரஜினி.

கமலைப் பொறுத்தவரை, ‘டபுள் ரோல்’ படங்கள் என்பது கெட்டப் சேஞ்சுக்கான ஒரு சிறந்த வழியாதான் இருந்திருக்கு.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம் போன்ற படங்களை தவிர்த்துப் பார்த்தால் அப்படி அவர் இரட்டை வேடங்கள்ல நடிச்ச படங்களே கணிசம்.

சட்டம் என் கையில், கல்யாண ராமன், எனக்குள் ஒருவன், தூங்காதே தம்பி தூங்காதே, இந்திரன் சந்திரன், ஆளவந்தான் என்று நம்மை பிரமிக்க வைக்குற அந்தப் பட்டியல்ல கமல் அப்பா – மகனா நடிச்ச கடல் மீன்கள், சங்கர்லால், ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன், இந்தியன் படங்களுக்கு தனி இடம் உண்டு.

ரஜினி, கமலுக்கு அடுத்த தலைமுறைய பொறுத்தவரை, ‘ஜீன்ஸ்’ படத்துல பிரசாந்த் இரட்டை வேடங்கள்ல நடிச்சார். ‘பொன்னர் சங்கர்’ படத்துலயும் அதை தொடர்ந்தார்.

அஜித் முதன்முதலாக டபுள் ஆக்‌ஷன் பண்ண படம் ‘வாலி’. அந்த படத்தோட வெற்றி ’வில்லன்’, ’அட்டகாசம்’, ‘பில்லா’ படங்கள்ல அவரை நடிக்க வச்சது. அந்த வரிசையில ‘சிட்டிசன்’, ‘அசல்’ படங்கள்லயும் ‘வரலாறு’ படத்துலயும் அப்பா மகனா நடிச்சிருந்தார் அஜித்.

இருமுகன், சாமி ஸ்கொயர், கோப்ரா படங்கள்ல டபுள் ஆக்‌ஷன் பண்ணியிருக்கார் விக்ரம்.

அதே மாதிரி வேல், மாற்றான், 7ஆம் அறிவு படங்கள்ல இரட்டை வேடமேற்ற சூர்யா ‘வாரணம் ஆயிரம்’, ’மாசு என்கிற மாசிலாமணி’, ‘24’ படங்கள்ல தந்தை, மகனா நடிச்சிருக்கார்.

எஸ்டிஆர் ‘மன்மதன்’, ‘சிலம்பாட்டம்’ படங்கள்லயும், கார்த்தி ‘சிறுத்தை’ படத்துலயும், ஜெயம் ரவி ‘ஆதி பகவன்’ படத்துலயும், தனுஷ் ‘கொடி’ படத்துலயும், ஆர்யா ‘சிக்குபுக்கு’ படத்துலயும் இரட்டை வேடங்கள்ல நடிச்சிருக்காங்க.

இதுவரைக்கும் நாம பார்த்த ‘டபுள் ஆக்‌ஷன்’ படங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு தியேட்டர்ல குதூகலம் தந்தவைன்னு சொல்லலாம். காரணம், அந்த நட்சத்திரம் ‘டபுள் ரோல்’ல வர்ற அந்த மொமண்ட், அவங்க மத்தியில ஏற்படுத்துன உற்சாகத்தை அளவிடவே முடியாது.

இந்த வரிசையில, விஜய் முதன்முதலாக இரட்டை வேடமேற்று நடிச்ச படம் ‘அழகிய தமிழ்மகன்’. ரத்த சம்பந்தம் இல்லாம, ஒரேமாதிரி தோற்றமளிக்கிற மாதிரி அந்த கேரக்டர்கள் இருந்தது. அதே மாதிரி ‘கத்தி’ படத்துலயும் ‘டபுள் ரோல்’ல நடிச்சார் விஜய்.

வில்லு, புலி, பிகில் படங்கள்ல அப்பாவும் மகனுமா இரட்டை வேடங்கள்ல நடிச்சிருக்கார் விஜய். இந்த வரிசையில ‘மெர்சல்’ படத்தையும் சேர்த்துக்கலாம்.

விஜய் ‘டபுள் ஆக்‌ஷன்’ செய்த படங்கள், அவரோட திரைப்பயணத்துல வேறொரு எல்லையை தொட வச்சதா அமைஞ்சிருக்கு. ’டபுள் ட்ரீட்’டா அவரது ரசிகர்களைக் கொண்டாட வைச்சிருக்கு.

அந்த வரிசையில ‘தி கோட்’ அமையுமா? ரசிகர்களுக்கு அந்த படம் என்னென்ன சர்ப்ரைஸ் தரப்போகுது?

லெட் அஸ் வெயிட்..!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டுகள் சினிமாவில் தடை!

Aus vs Sco: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா

கோலியா? தோனியா? அதிக வரிப் பணம் செலுத்தும் கிரிக்கெட் வீரர் யார்?

Paralympics 2024: மீண்டும் 4 பதக்கங்கள்… ஹர்விந்தர் சிங், தரம்பீர் புதிய சாதனை!

Actor Vijay in a Double Role

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share