கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை வரும் 17ஆம் தேதி சந்தித்து நடிகர் விஜய் கல்வி உதவித் தொகை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் உச்சபட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.
அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினைச் சேர்ந்த 169 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். அதில் 115 பேர் வெற்றி பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த மாதம் 29ஆம் தேதி உலக பட்டினி தினத்தன்று, ஏழை மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த கல்வியாண்டில் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று (ஜூன் 7) அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், “நடிகர் விஜய்யின் உத்தரவுப்படி வரும் 17ஆம் தேதியன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்சன் சென்டரில் 2023ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய், சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுமார் 1,500 மாணவ மாணவியருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
’துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்’: டிடிவி தினகரன் சூளுரை!
மீண்டும் 45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!