மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ படம் வெளியாகிறது. பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், சினேகா, மோகன் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘தி கோட்’ படத்துக்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தியிடம் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது , “தற்போதைய நிலையில், அதிக சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகராக விஜய் உள்ளார். பிகில் படத்துக்கு 180 கோடிதான் செலவழித்திருந்தோம்.
பிகில் படம் எடுக்கும் போது இருந்த நடிகர் விஜய் மார்க்கெட்டுக்கும் தற்போதைய மார்க்கெட்டும் ஐந்து வருட இடைவெளி உள்ளது. தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் விஜய்க்கு மார்க்கெட் அதிகரித்துள்ளது. அதனால்தான், நடிகர் விஜய்யுடன் படங்கள் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்.
படத்தில் விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுத்தும் எங்களால் லாபம் பார்க்க முடிகிறது. ஜி.எஸ்.டியுடன் சேர்த்து கிட்டத்தட்ட தி கோட் படத்திற்காக 400 கோடி செலவழித்துள்ளோம். எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இவ்வளவு பணம் செலவழிப்பதால் எங்களுக்கு அழுத்தமும் இல்லாமல் இல்லை.
ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு நல்லதொரு ஸ்கிரிப்ட் வேண்டும். நடிகர் விஜய் போல ஒரு கடின உழைப்பாளியை பார்க்கவே முடியாது. அவரை நம்பி தைரியமாக ஒரு ப்ராஜெக்ட்டில் களம் இறங்கலாம்” என்று கூறியுள்ளார்.
தி கோட்டுக்கு அடுத்ததாக தளபதி 69 படம் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ரூ.250 கோடி சம்பளம் விஜய் பெறப்போவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலில் ஈடுபட போவதால், தளபதி 69 விஜய்யின் கடைசி படமாக அமைகிறது, தமிழை விட மிகப் பெரிய சந்தையை கொண்ட பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் விஜய்க்கு சமமாக ரூ.250 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வாழை படத்தின் தாக்கம் இதுதான்… மாரி செல்வராஜ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது என்ன?
கலைஞர் எனும் தாய்! -நூல் விமர்சனம்!