நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 69-ஆவது படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த விஜய், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும், பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார்.
அதன்படி விஜய்யின் 69-ஆவது படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒருபுறம் படத்தின் ஷூட்டிங் மறுபுறம் பாலிடிக்ஸ் என விஜய் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

நேற்று முன்தினம் (ஜனவரி 24) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை விஜய் சந்தித்தார். முதற்கட்டமாக 20 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து அவர்களுக்கு வெள்ளிக் காசை பரிசாக கொடுத்தார்.
கடைசி படத்தில் விஜய் நடித்து வருவதால், அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தநிலையில், விஜய்யின் 69-ஆவது படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தின் போஸ்டரானது ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது வேனின் மீது ஏறி நின்று விஜய் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த அதேசாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் விஜய் பின்னால் வெள்ளை உடையணிந்து பலரும் கோஷங்கள் எழுப்பியபடி அணிவகுத்து நிற்கின்றனர்.
விஜய்யின் கடைசி படத்திற்கு அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’ அல்லது ‘முதல்வன்’ என பெயர் வைக்கப்படும் என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில், ‘ஜனநாயகன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.