’கமல் ஹாசன் தமிழ் சினிமாவின் அடையாளம்!’ – நடிகர் சூர்யா வாழ்த்து

Published On:

| By Sharma S

நடிகர் கமல்ஹாசனின் 70ஆவது பிறந்த நாளான இன்று(நவ.7) அவருக்கு நடிகர் சூர்யா தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இயக்குநர் ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் 3டி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, கமல்ஹாசனுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அந்த மேடையில் பேசுகையில், ‘ இன்று கமல்ஹாசன் பிறந்த நாள். ‘ராஜபார்வை’ படத்திற்கு வணிக வெற்றி கிடைக்கவில்லை. அதே வருடத்தில் இந்தியில் ஒரு படம், பின்னர் ‘நாயகன்’, ‘பேசும் படம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நான் நடிக்கும் போது அவர் 50 வயதில் 10 வேடங்களில் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

என்னைவிட 20 வயது மூத்தவரான கமல் சார், தான் நடிக்கும் 10 வேடங்கள் குறித்து அப்போது என்னிடம் காண்பித்துக் கொண்டிருந்தார். கமல்ஹாசன் நம் தமிழ் சினிமாவின் அடையாளம். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ‘’சந்திரலேகா’, ‘ஔவையார்’ போன்ற பிரம்மாண்ட படங்கள் முன்னரே எடுத்துள்ளனர். அதுபோல இந்த காலத்தில் நாங்கள் எடுத்துள்ள படம் தான் ’கங்குவா’ . இந்தப் படத்தை எடுக்க ஞானவேல் தட்டாத கதவுகள் இல்லை.

ஞானவேல் மற்றும் எனது ரசிகர்கள் இல்லாமல் இங்கு நான் இல்லை. ‘கங்குவா’ ஒரு கூட்டு முயற்சி. யாருமே காசுக்காக, கடமைக்காக இந்தப் படத்தை எடுக்கவில்லை. இந்திய சினிமாத்துறையில் அனைவரும் வாய் பிளந்து ஆச்சர்யத்துடன் பார்க்கப் போகிறார்கள்.

நான் ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்தை 3டியில் பார்த்த ஞாபகம் உள்ளது. இப்போது என் படமும் 3டியில் வெளியாவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் வெறும் சண்டையை மட்டும் காட்டாமல் வெளியிலும், மனதுக்குள்ளும் நடக்கும் போர் பற்றி பேசுகிறது. இப்படம் மன்னிப்பு பற்றி உயர்வாக பேசும்.

நிச்சயம் திரைப்படம் நெருப்பு மாதிரி இருக்கும். இரட்டை தீபாவளியாக இருக்கும்’ எனப் பேசியுள்ளார். நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 44’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்தப் படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

‘கங்குவா’ படத்துக்கு வந்த சிக்கல்… கடனை அடைப்பதாக ஸ்டுடியோ கிரீன் உறுதி!

’’உயிரே’ பட கிளைமாக்ஸே வேற!’ – நடிகை மனிஷா கொய்ராலா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share