’மூன்று நாட்களாக மிதக்கிறேன்’: சூரி உருக்கம்!
கடந்த வாரம் வெளியான ‘விடுதலை’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறனின் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியான திரைப்படம் ‘விடுதலை: முதல் பாகம்’. நகைச்சுவை நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மூத்த இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களும், வேல்ராஜின் ஒளிப்பதிவும், அதற்கு மேலாக வெற்றிமாறனின் அசாத்தியமான இயக்கமும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளன.
திரையரங்குகளில் வெளியான நாள் முதலே பாராட்டுகளை குவித்து வரும் விடுதலை திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் நகைச்சுவை நடிகராக மக்களிடையே அங்கீகாரம் பெற்றவர் சூரி.
விடுதலை படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து நெகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “அனைவருக்கும் வணக்கம். மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி.
‘விடுதலை’ முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்து சென்ற பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம்.” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சூரி.
கிறிஸ்டோபர் ஜெமா
கடைசி நேரத்தில் பதற்றம்… முதல் வெற்றியை பதிவு செய்தது சி.எஸ்.கே
நேட்டோவில் பின்லாந்து: அதிகரிக்கும் போர் பதற்றம்!