பிரபல நகைச்சுவை நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நேற்று (மே 3) உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் காலமானார். இந்த துயர செய்தியை அறிந்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
சக நடிகர்கள், இயக்குநர்கள், ரசிகர்கள் என அனைவரும் மனோபாலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முதலே திரைத்துறையினர், நடிகர்கள் அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூரி இன்று (மே 4) சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி,
”சினிமா துறைக்கும் நம் சமூகத்திற்கும் மிகப் பெரிய இழப்பு. மனோபாலா அண்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் 100 பேர் இருந்தாலும் அனைவரையும் சிரிக்க வைக்கக் கூடிய ஒரு நல்ல காமெடியன்.
அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இல்லை என்றாலே பெரிய ஏமாற்றமாக இருக்கும். விடுதலை படத்தைப் பார்த்து விட்டு, என்னிடம் கிட்டத்தட்ட அரைமணி நேரம் பேசியிருப்பார்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எனது உடல் மொழி, பேச்சு என அனைத்தையும் விவரித்தார்.
ஒரு நல்ல மனிதர். இப்படி ஒரு சூழலில் அண்ணனை பார்த்திருக்கவே கூடாது. ’அண்ணன், உங்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். நீங்கள் எப்போதும் எங்கள் உடன் தான் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் குடும்பத்திற்கு இறைவன் எப்போதும் ஆறுதலாக இருப்பார்’” என்று கண்கலங்கிப் பேசினார்.
மனோபாலாவின் உடல் இன்னும் சற்று நேரத்தில் வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
மோனிஷா
“திராவிட மாடல் காலாவதியான கொள்கை”: ஆளுநர் ரவி
எதிர்சேவை: கள்ளழகரை வரவேற்ற மக்கள்