கல்யாணம் முடித்து குழந்தை பெற்ற பிறகு டாக்டர், எம்.டி பட்டம் பெற்ற சிவகார்த்திகேயனின் சகோதரி!
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் மிக முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து அந்த படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் புதிய சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு துப்பாக்கி படம் போல் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையை முருகதாஸ் புது உச்சத்திற்கு கொண்டு செல்வாரா என எதிர்பார்ப்பு உள்ளது.
ஏற்கனவே, அரசியலுக்கு செல்வதால் நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய்யின் இடத்தை வருங்காலத்தில் சிவகார்த்திகேயன் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால், அமரன் படம் அவரை அத்தகைய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்றால் மிகையல்ல.
சிவகங்கையில் ஜி தாஸ் மற்றும் ராஜி தாஸ் தம்பதியினருக்கு 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் சிவகார்த்திகேயன். இவருக்கு கௌரி மனோகரி என்ற சகோதரியும் இருக்கின்றார். தற்போது, தனது சகோதரி 42-வது வயதில் படைத்த சாதனை குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு MBBS படித்து முடித்தார். 38 வயதில் MD படிப்பை கோல்டு மெடலுடன் வாங்கியதோடு, அதை தொடர்ந்த தற்போது 42 வயதில் FRCP ( Fellowship of the Royal College of Physicians)கௌரவமும் பெற்றுள்ளார்.
பல தடைகளை தாண்டி அவர் சாதித்து வருகிறார். எப்போதும் அக்காவுக்கு உறுதியான துணையாக இருக்கும் அத்தானுக்கும் நன்றி” இப்படி குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த பதிவில் ஏராளமான ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கும் அவரின் சகோதரிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
இசையமைப்பாளர் ஆதித்யனை நினைவூட்டும் ‘ரோஜா மலரே’ பாடல்கள்!
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?