‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். கடந்த 23 வருடங்களாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் சித்தார்த், அவ்வப்போது படங்களையும் தயாரித்து வருகிறார்.
இப்போது தன்னுடைய சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ‘எடாக்கி என்டர்டைன்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்திருக்கும் படம் ‘சித்தா’.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான எஸ்.யு.அருண்குமார்தான் சித்தா படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், குழந்தை நட்சத்திரமான சரசரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார். மேலும், படத்திற்கான விளம்பர பாடல் ஒன்றுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த ‘சித்தா’ படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இதையொட்டி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சித்தார்த்தும், இயக்குநர் அருண்குமாரும் ‘சித்தா’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் பேசும்போது, “சித்தார்த் சாரை மனதில் வைத்துதான் இந்த கதையை நான் எழுதினேன். இதற்கு முன்பு நான் இப்படி செய்ததில்லை. படம் பண்ணலாம் என்று பேசினோம். அதன் பிறகு அவர் அட்வான்ஸ் கொடுத்தார். பிறகுதான் இந்தக் கதையை நான் எழுதினேன்.
இது கடத்தல், திரில்லர் ஜானர் கதை என்றாலும் மிக இயல்பாக சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் நடக்கும் கடத்தல் சம்பவத்தை முழுவதும் சினிமாத்தனமாக அணுகாமால், தனிப்பட்ட வாழ்க்கை முறையோடு தொடர்பு படுத்திக் கொள்வது போல் உருவாக்கியிருக்கிறேன்.
ஒரு குழந்தை காணாமல் போகிறது, அந்த சம்பவத்தால் ஒரு குடும்பம் எப்படி சிதறிப் போகிறது. பிறகு அது ஒன்றாக சேர்வது எவ்வளவு சிரமம் என்ற ரீதியில் கதை நகரும். படம் பார்க்கும்போது, வில்லன் மீதோ அல்லது வேறு எங்கோ உங்கள் கவனம் இருக்காது. அந்த சம்பவத்தை நீங்கள் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் கொள்வது போலத்தான் இருக்கும். இப்படி ஒரு கதை எழுத ஒரு சம்பவம் அல்ல. நம் சமூகத்தில் நடந்த பல சம்பவங்கள் தூண்டுதலாக இருந்தது.
சித்தார்த் – நிமிஷா இடையில் அழகான காதலும் இருக்கிறது, சித்தப்பா, அண்ணன் மகள் இடையிலான உணர்வுப்பூர்வமான பாசப் போராட்டமும் இருக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து ஒரு இயல்பான கதையை இதுவரையிலும் யாரும் சொல்லாத வடிவில் சொல்லியிருக்கிறேன்.
இந்தக் கதையை எழுதும் போதே, எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால், அவருடன் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட படமாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் எழுதினேன். அதனால், இந்தப் படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைத்து தரப்பினரும் பார்க்கலாம்…” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான சித்தார்த் பேசும்போது,
“சித்தப்பா’ என்பதன் சுருக்கம்தான் இந்த ’சித்தா’ என்ற தலைப்பு. ஹீரோவுக்கும், அவர் அண்ணன் மகளுக்குமான பாசப் பிணைப்புதான் கதை, ஆனால், அதை மட்டுமே கதையாக சொல்லாமல், சமூகத்தில் நடக்கும் ஒரு குற்றத்தைக் கையில் எடுத்து, அதற்கு எந்தவித ஒப்பனையும் இன்றி, அப்படியே மிக அழகான ஒரு உலகத்தை இயக்குநர் இதில் கொடுத்திருக்கிறார்.
இதுவொரு சர்வதேச படம். அனைத்து நாட்டு மக்களுக்கும் பொதுவான கதை. படம் வெளியான பிறகு நிச்சயமாக இது பல விவாதங்களை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, இந்த படத்தை பத்திரிகையாளர்கள் பார்த்த பிறகு அவர்களுடன் நான் விவாதம் நடத்த இருக்கிறேன். அதனால், இந்த படத்தை பலருக்கும் நாங்கள் போட்டுக் காட்ட திட்டமிட்டுள்ளோம். தற்போது நாங்கள் யாரை மதிக்கிறோமோ, யாரை எல்லாம் பார்த்து பயப்படுகிறோமோ. அவர்களுக்கு எல்லாம் படத்தை போட்டு காட்டிவிட்டோம். அவர்கள் அனைவரும் படத்தை பாராட்டி விட்டார்கள். அவர்கள் யார்? என்று இப்போது சொல்ல மாட்டேன்.
தயாரிப்பாளர் பார்வையில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு கடத்தல், திரில்லர் பாணி படம் என்று சொல்லலாம். ஆனால், அதை முழுவதும் சினிமாத்தனமாக சொல்லாமல், மிக எதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.
படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்களோ அதுபோன்ற உணர்வு தியேட்டரில் அவர்களுக்கு ஏற்படும் வகையில் சொல்லியிருக்கிறோம்.
கடத்தல், திரில்லர் என்றதுமே படம் வேறு மாதிரியாக இருக்கும் என்று நினைக்க வேண்டும். முழுக்க, முழுக்க மிக எதார்த்தமான படமாகத்தான் இருக்கும். அதுதான் இந்த படத்தின் சிறப்பு என்றுகூட சொல்லலாம். நானே இந்தப் படத்தில் புதிதாக தெரிகிறேன். நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 21-வது வருடத்தில் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் அருண் குமார் என்னை மீண்டும் நடிகராக அறிமுகப்படுத்துகிறார் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படத்தை மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தை இரண்டு வருடங்களில் முடித்திருக்கிறோம். ஆனால், இதன் படைப்பு நேர்த்தியில் எங்கள் முழு அனுபவத்தையும், உழைப்பையும் கொட்டி இருப்பதால் என் 23 வருட உழைப்பில் உருவான சிறப்பான, தகுதியான திரைப்படம் இது என்று அடித்துச் சொல்வேன்.
இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பு மிக முக்கியமானது. நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டி விட்டார். அவர் முதல் நாளில் எப்படி நடித்தாரோ, அதே போல்தான் இறுதி நாள்வரையிலும் நடித்தார். எந்த ஒரு இடத்திலும் ஏற்றம் இறக்கம் இல்லாமல், அந்த கதாபாத்திரத்தை மிக சரியாக கையாண்டிருந்தார். அதைப் பார்த்து நான் வியந்துவிட்டேன். அதற்கு காரணம் நாங்கள் படத்திற்காக எடுத்துக்கொண்ட முயற்சிதான்.இந்தப் படத்தில் நான், நிமிஷா, அஞ்சலி நாயர் போன்றவர்கள்தான் சினிமா அனுபவம் உள்ளவர்கள். ஆனால், மற்ற வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் இதுவரை எந்தவொரு கேமரா அனுபவமும் இல்லாதவர்கள்.
10 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் சீட் நுனியில் அமர்ந்துதான் இந்தப் படத்தைப் பார்ப்பார்கள். படத்தின் துவக்கத்தில் முதல் 10 நிமிடங்களுக்கு படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களை படத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வது போல்தான் கதை நகரும். அதன் பிறகு படம் உங்களை கட்டிப்போடும் விதத்தில் பயணிக்கும். ஒரு நிமிடம்கூட நீங்கள் கவனம் சிதறாமல் படத்துடன் பயணிப்பீர்கள்.
இதைவிட ஒரு நல்ல படத்தை இனிமேல் யாராலும் எடுக்க முடியாது. இப்படி நான் சொல்வது உங்களுக்கு அதிகம் பேசுவது போல் இருக்கும். ஆனால், படத்தை நீங்கள் பார்த்த பிறகு, இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு இவங்க ஏன் இப்படி அடக்கி வாசிச்சாங்க என்று நினைப்பீர்கள். அப்படி ஒரு படமாக இந்த ‘சித்தா’ இருக்கும்.” என்றார் உறுதியான குரலில்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள, இப்படத்திற்கு நான்கு மொழிகளிலும் நடிகர் சித்தார்த்தே டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
பொன்முடி வழக்கு : ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு!
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’: டீசர் எப்படி?