அடுத்த சூப்பர் ஸ்டார்: சர்ச்சைக்கு சத்யராஜ் வைத்த முற்றுபுள்ளி!

Published On:

| By christopher

actor sathyaraj pointout who is real superstar

வாரிசு படத்தில் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தை தொடங்கிவைத்தார் நடிகர் சரத்குமார். தமிழ் சினிமாவில் மற்ற பிரச்சினைகளை காட்டிலும் சூப்பர் ஸ்டார் யார் என்கிற விவாதங்கள் ஓடிக் கொண்டிருந்த சூழலில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வணிகரீதியாக இங்கு யாரும் நிரந்தர சூப்பர்ஸ்டார் இல்லை என்றதுடன் தமிழ் சினிமா வணிகத்தையும், வசூலையும் அதிகரிக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார்.

இருந்தபோதிலும் ஜெயிலர் வெளியான பின்பு அதன் வசூலை முன்வைத்து சூப்பர்ஸ்டார் விவாதத்தை விஜய்க்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்கள் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள  கருத்து தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள ஸ்ரீபதி கதை நாயகனாகவும் நடித்துள்ளார்.

கடுமையும், பயமுறுத்தக்கூடிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார்.  மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்-8 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 20) மாலை சென்னையில் நடைபெற்றது.

actor sathyaraj pointout who is real superstar

என் கையில் சினிமா இல்லை!

இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீபதி என்னிடம் கதையை சொல்வதற்கு முன்பாகவே இந்த படத்தில் ’நான் ஹீரோ.. நீங்கள் வில்லன்.. ஓகேவா?’ என்றார். இதற்கு முன்னர் இயக்குனர் ராஜமவுலி பாகுபலி படத்திற்காக என்னிடம் பேசியபோது இதேபோலத்தான் கேட்டார்.

அங்காரகன் முழுக்கதையும் அவர் கூறியபோது கதையும் பிடித்திருந்தது எனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பதற்கான நிறைய வாய்ப்பு இருந்தது.

லவ் டுடே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது கூட ஒரு தயக்கம் இருந்தது. ஆனாலும் ஒப்புக்கொண்டு நடித்தேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் இப்போதெல்லாம் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. தவிர  வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை காலத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தாயார் இறந்த ஒரே வாரத்தில்…

என் தாயார் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நான் இந்த விழாவிற்கு வந்துவிட்டேனே என்கிறார்கள். அதற்கு காரணம் எனது அம்மா தான். எங்களது சொந்த பந்தத்தில் 16 நாள் காரியங்கள் முடியாமல் வெளியில் வரக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.

ஆனால் நான் பெரியாரிஸ்ட் என்பதால் இரண்டு வருடங்களுக்கு முன்பே என் தாயார் என் சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்து, அவர் இறந்து விட்டால் நான் ஒரே மகன் என்பதால் எந்த சடங்குகளையும் செய்யச் சொல்லி நிர்பந்திக்க கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டார். அப்படி அவர் கூறியதால் தான் இன்று இந்த மேடையில் வந்து நிற்க முடிகிறது.

actor sathyaraj pointout who is real superstar

வில்லனின் கைகளை கட்டிப்போட கூடாது!

நான் தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன். என் கையில் தற்போது 20 படங்கள் இருக்கின்றன. வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு வரும்போதே எனக்கு தமிழும் அரைகுறை ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என்பதை முதலிலேயே சொல்லிவிடுவேன்.

நல்ல அப்பாவாக தொடர்ந்து நடித்து வருவது போரடிக்கிறது. அதிலும் ஏதாவது வில்லங்கமாக இருந்தால் நடிக்க தயார். அதேபோல நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தாலும் தொடர்ந்து இதே போல நடிப்பேன் என சொல்ல முடியாது. வில்லனின் கைகளை இயக்குநர் கட்டிப்போடாமல் இருக்க வேண்டும். ஹீரோக்களும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

நான் சினிமாவிற்கு நுழைந்த காலகட்டத்தில் கமல், ரஜினி ஆகியோரின் ஆதரவு இருந்தது. அப்படி இருந்தால் வில்லனாக நடிப்பது ஒரு சுகமான அனுபவம்.  இயக்குனர் மணிவண்ணனை போல என்னை மனதில் வைத்து எனக்காகவே கதாபாத்திரங்களை உருவாக்குபவர்கள் இப்போது இல்லை.. காரணம். அவர் சித்தாந்த ரீதியாக எனக்கு ஒரு குருநாதரும் கூட.

சமூக கருத்துக்களை சொல்வது கூட அரசியல் தான்!

கட்சி ஆரம்பிப்பது என்பதெல்லாம் ஓட்டு அரசியல். ஆனால் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்வதும் அதை சொல்பவர்களுக்கு பின்னால் நிற்பதும்கூட அரசியல் தான். நான் அதைத்தான் செய்து வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்கிறார்.. அது கூட அரசியல் தான். ஒரு பிரபலமான கலைஞன் கோழையாக இருந்தால் கோழையான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு அவர் காரணமாகி விடுவார்.

எனக்கு தோன்றிய கருத்துக்களை நான் சொல்வேன்.. நடிகராக இருக்க வேண்டுமா, பெரியாரிஸ்ட்டாக இருக்க வேண்டுமா என்றால் பெரியாரிஸ்ட்டாக இருப்பேன் என அப்போதே முடிவெடுத்தேன். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. ஆண் பெண் பேதம் இல்லை என்பதால் திராவிடர் இயக்கத்தின் பின்னால் நிற்கிறேன்.

நான் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் படம் இயக்கியதால் மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தேன். அந்த அளவிற்கு வேலைப்பளு இருப்பதாலும், நடிப்பது டூர் போவது போல ஜாலியான விஷயம் என்பதாலும் டைரக்சன் பற்றி இப்போது யோசிக்கவில்லை.

actor sathyaraj pointout who is real superstar

சூப்பர் ஸ்டார் என்றால்…

சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறார்.. அதை மாற்றக்கூடாது.. என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார்.. ஏழிசை மன்னர், மக்கள் திலகம், நடிகர் திலகம் என காலத்திற்கேற்ப பட்டங்கள் மாறினாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் தான் சொந்தமானவர்.

ஜினி சாரை மக்கள் திலகம் என்றால் ஏற்றுக் கொள்வார்களா ? தசாவதாரம் படத்தில் கமல் சார் சூப்பராக நடித்ததால் அவரை நடிகர் திலகம் என்று கூற முடியுமா ? சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்.. உலக நாயகன் என்றால் கமல்.. தளபதி என்றால் விஜய்.. தல என்றால் அஜித்” என்று சத்யராஜ் பேசியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

வெங்காய விலை உயர்வு: 40 சதவிகிதம் ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு

உக்ரைன் மீது ரஷ்யாவின் பதிலடி: ஏழு  பேர் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.