நடிகர் சத்யராஜ் அடையாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற கருத்தரங்கில் நேற்று (நவம்பர் 8) கலந்து கொண்டார்.
திமுக மூலம் தமிழின் பக்கம் பார்வை திரும்பியது!
அப்போது பேசிய அவர், “நான் 15 வயது சிறுவனாக இருக்கும் போது கலைஞரின் பராசக்தி திரைப்பட வசனங்கள் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. ஈழ விடுதலைக்கு பெரிய உத்வேகம் கொடுத்தது திராவிட இயக்கங்கள்தான்.
தமிழ் தேசியம் ஆரியத்தைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர, திராவிடத்தை அல்ல. எனக்கு 11 வயதானபோது, அதாவது 1965ல் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அதனை பெரிய அளவில் எடுத்துச் சென்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.
அதனால்தான் என்னை போன்ற ஒரு 11 வயது சிறுவனின் பார்வை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் தமிழின் பக்கம் திரும்பியது. தமிழின் பெருமை பக்கம் திரும்பியது” என்றார்.
திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என பிரபாகரன் கூறினார்!
மேலும் அவர், “1985 காலகட்டத்தில் ஈழத் தமிழர் விடுதலைப் போர் உச்சகட்டத்தில் இருக்கிறது. அந்தப் போராட்டத்தில் திராவிட இயக்க தலைவர்களும் தோழர்களும்தான் பங்கெடுக்கிறார்கள். கிட்டத்தட்ட தூக்கு தண்டனை வரை சென்றார்கள். ஈழ விடுதலைக்கு பெரிய அளவில் உத்வேகமாக இருந்தது திராவிட இயக்கங்கள்தான்.
பிரபாகரன் மீது திராவிட தலைவர்கள் மரியாதை வைத்திருந்தார்கள். திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று தான் பிரபாகரன் கூறி உள்ளார். அவர் ’தமிழ் மொழி பேசுகிற திராவிடர்களாகிய நாங்கள்’ என்று தான் பேசினார்.
தமிழ் தேசியத்தின் அரண், திராவிட இயக்கங்கள்தான், ஆரிய பண்பாட்டின் பாசிசத்தை தடுத்து நிறுத்தும் அரண் திராவிட இயக்கம்தான். அந்த இயக்கம் ஆட்சியில் இருக்கும் போது அந்த அரண் வெறும் கற்கோட்டையாக இல்லாமல் இரும்பு கோட்டையாக இருக்கிறது. அந்த இரும்புக் கோட்டையில் முதன்மை காவலராக முதலமைச்சர் திகழ்கிறார். நிலம், மொழி, பண்பாடு காக்கும் படை தளபதி பக்கம் நிற்போம். அதுதான் என்னுடைய கருத்து.
தமிழ் தேசியத்தை ஆரியத்திற்கு எதிராகத்தான் நிறுத்த வேண்டுமே தவிர திராவிடத்திற்கு எதிராக நிறுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது பெரிய தப்பான விஷயம். தமிழ் மன்னர் காலத்தில் ஆரிய மேன்மை என்ற மாயைதான் தமிழுக்கு எதிராக இருந்தது. திராவிட இயக்கங்களின் வளர்ச்சிதான் அதை தடுத்து நிறுத்தியது. தற்போதும் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ் தேசியம் என்கின்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஆரியத்திற்கு துணை போவது என்பதுதான். அதுவே எங்களின் கருத்து.
அப்படி போகும்போது சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்கு என்ற போர்வையில் சகலவிதமான மூடநம்பிக்கைகளும் வளரும், சாதிய ஒடுக்குமுறை, பெண் அடிமைத்தனம், மதம், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் அடக்குமுறைகள் எல்லாம் தலை தூக்கும்” என்றார்.
அஜித்துக்கு பாராட்டுகள்!
மேலும், சத்யராஜ் பேசுகையில், ”சமீபத்தில் நடிகர் அஜித் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி அந்த வீடியோவில் கூறியிருந்தார். அந்த வீடியோவில் அவர் பேசியிருந்த கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது. ’சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனை பார்த்து கோபம் வருகிறது என்றால், அதற்கு காரணம் மதம்தான். ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது.
ஆனால் அந்த மதம்தான் தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது . மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது என்றும் சொல்வார்கள். அது ரொம்பவே உண்மை’ என்று அஜித் அந்த வீடியோவில் பேசியிருந்தார். இப்படி ஒரு அழகான ஆழமான கருத்தை வெளியிட்ட தம்பி அஜித்துக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு நடிகர் சத்தியராஜ் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
குறைந்தது தங்கம் விலை… மக்கள் மகிழ்ச்சி!
INDvsSA T20: சஞ்சு சாம்சன் அதிவேக சதம்… இந்திய அணி படைத்த சாதனைகள் இதோ!