பிரபல குணச்சித்திர நடிகர் சரத் பாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்று செய்திகள் வெளியான நிலையில் இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு. தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத்பாபு செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடல் உறுப்புகள் விரைவில் செயலிழக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சரத்பாபுவின் உடல்நிலை மோசமானதால் கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று காலமானதாக செய்திகள் வெளியானது.
சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் இரங்கல்கள் தெரிவித்து வந்தனர். நடிகை குஷ்பு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் சரத் பாபு உயிரிழக்கவில்லை. சமூக வலைதளங்களில் சரத்பாபு பற்றி தவறாக செய்திகள் வருகின்றன. சற்று குணமடைந்து, வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் பூரண குணமடைவார். சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று சரத்பாபு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் கமல், குஷ்பு உள்ளிட்டோர் தங்களது பதிவை நீக்கியுள்ளனர்.
பிரியா
ஆடியோ சர்ச்சைக்குப் பிறகு பிடிஆர் ஏறும் கட்சி மேடை!
தனியார்வசம் செல்லும் காலை உணவு திட்டம்?: ஊழியர்கள் போராட்டம்!