சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் விமர்சனத்தை இங்கே நாம் பார்க்கலாம்.
வெறுமனே சிரிக்க வைக்கும்!
நகைச்சுவை நடிகர்கள், நடிகைகள் மிகச்சாதாரணமாக பேசிய வசனங்கள் ஒரு தலைமுறையின் தினசரி வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தியதற்குப் பல்வேறு உதாரணங்கள் உண்டு. மிகச்சில வசனங்கள் அல்லது வார்த்தைகள் தலைமுறைகள் தாண்டியும் கோலோச்சும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு என்று சில ஜாம்பவான்கள் உதிர்த்த வசனங்கள் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடிப்பதுண்டு.
‘உத்தமராசா’ படத்தில் ‘நரி ஊளைவிடுமா’ என்று செந்திலைப் பார்த்து கவுண்டமணி கேட்கும் காட்சியும் அந்த வரிசையில் இடம்பிடிக்கத்தக்கது. வடக்குபட்டி ராமசாமி எனும் நபரிடம் கொடுத்த கடனை வசூல் செய்ய கவுண்டமணி பாத்திரம் செல்வதாக அக்காட்சி தொடரும்.
அப்படியொரு புகழைப் பெற்ற ‘வடக்குபட்டி ராமசாமி’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார் சந்தானம். ‘டிக்கிலோனா’ தந்த கார்த்திக் யோகி இதனை இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் கதை 1970-களில் நடப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் வெளியான ‘80ஸ் பில்டப்’ படத்தின் கதை இப்படியொரு காலகட்டப் பின்னணியில் அமைந்திருந்ததும், மருந்துக்குக் கூட சிரிப்பூட்டாமல் அது படுத்தி எடுத்ததும் நாம் அறிந்ததே. ’வடக்குபட்டி ராமசாமி’யும் அந்த வழியில் அமைந்திருக்கிறதா அல்லது வெடிச்சிரிப்பினை தியேட்டரில் எழுப்புகிறதா?
கோயில் பெயரில் மோசடி!
வடக்குபட்டியில் வாழும் பதின்ம வயதுச் சிறுவன் ராமசாமி. சிறு வயது முதலே கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழும் அவரிடம், ’ஊருக்கு அருகிலுள்ள மலை மீதிருந்து தெய்வம் இறங்கி வந்து நம்மைக் காக்கும்’ என்று அடிக்கடி சொல்லி வருகிறார் அவரது தாய்.
ஒருநாள், ராமசாமி வீட்டு வாசலில் இருந்த ஒரு மண் பானையை எடுத்துக்கொண்டு ஓடுகிறார் ஒரு மனிதர். தான் திருடிய தங்க நகைகளை அதில் வைத்து ஓரிடத்தில் புதைக்கிறார். அடையாளம் காணும் வகையில், அங்கு ஒரு கல்லையும் வைக்கிறார்.
அதேநேரத்தில், காட்டேரி வேடமிட்ட ஒரு மர்ம நபர் ஊருக்குள் புகுந்து கொள்ளையடிக்கிறார்; மாட்டு வண்டியில் தப்பிச் செல்லும் அந்த நபரை வடக்குபட்டி மக்கள் விரட்டுகின்றனர்.
பானையைத் திருடியவரைத் தேடி வந்த ராமசாமி, எதிரே கோர உருவத்துடன் இருக்கும் மர்ம ஆசாமியைக் கண்டதும் பயமுறுகிறார்; கண்ணை மூடிக் கொள்கிறார். ஆனால், திருடன் வைத்த கல்லில் மோதி அந்த மாட்டு வண்டி கவிழ்கிறது. ஊர் மக்களிடம் பிடிபடாமல், அந்த மர்ம ஆசாமி தப்பியோடி விடுகிறார்.
கல் இடம்பெயர்ந்ததில், அதன் அடியில் இருந்த பானையில் உள்ள தங்க நகைகள் பளிச்சிடுகின்றன. அதனைக் காணும் ஒரு மூதாட்டி, ’காட்டேரியை விரட்டியது அம்மன் தான்’ என்கிறார்.
குடும்ப வறுமையைப் போக்க அந்த சூழ்நிலையைப் பயன்படுத்த எண்ணும் ராமசாமி, தனது நிலத்தில் சுயம்புவாக முளைத்த அம்மன் இது என்று முழக்கமிடுகிறார். அதன்பிறகு, கண்ணாத்தாள் என்ற பெயரில் ஒரு கோயிலையும் உருவாக்குகிறார். அதனைப் பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்துகிறார்.
இளைஞராக வளர்ந்தபிறகும், ராமசாமி (சந்தானம்) இந்த வழக்கத்தைக் கைவிடுவதில்லை. இந்த நிலையில், ஊருக்குப் புதிதாக வரும் வட்டாட்சியர் (தமிழ்) கோயில் சொத்துகளைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்க ஒரு ஐடியா தருகிறார். பதிலுக்கு தனக்கு நிறைய பங்கு வேண்டும் என்று கேட்கிறார்.
அதனை ஏற்க மறுக்கும் ராமசாமி ‘நானே அதனைச் செயல்படுத்துகிறேன்’ என்று களத்தில் இறங்குகிறார்.அதனால் வன்மம் வளர்க்கும் அந்த வட்டாட்சியர், கண்ணாத்தாள் கோயிலை மூடச் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று ஏங்குகிறார்.
அதற்கேற்றாற் போல, கோயிலில் அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு பணக்காரர்கள் மோதிக் கொள்கின்றனர்.அவர்களது ஆட்களும் அடித்துக் கொள்கின்றனர். அடிதடியைத் தடுக்கும் போர்வையில், வட்டாட்சியர் அங்கு வருகிறார். அதையடுத்து, கண்ணாத்தாள் கோயில் மூடி ’சீல்’ வைக்கப்படுகிறது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, கோயிலைத் திறக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் ராமசாமி. பிரச்சனைக்குக் காரணமான இரண்டு பணக்காரர்களுக்கும் ‘மெட்ராஸ் ஐ’ நோயைப் பரப்பத் திட்டமிடுகிறார். அதன் மூலமாக, ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கோயிலைத் திறந்துவிட முயற்சிக்கிறார்.
வட்டாட்சியர் மட்டுமல்லாமல் மருத்துவம் படித்த கயல்விழி (மேகா ஆகாஷ்), கடவுள் நம்பிக்கையற்ற பெரியவர் (செம்புலி ஜெகன்), மேஜர் சந்திரகாந்த் (நிழல்கள் ரவி) எனும் ராணுவ அதிகாரி என்று பலர் வடக்குபட்டி ராமசாமியின் முயற்சிக்குத் தடைக்கற்களாகத் திகழ்கின்றனர்.
அவர்களது எதிர்ப்பை முறியடித்து, கண்ணாத்தாள் கோயிலை ராமசாமி திறந்தாரா? இல்லையா? என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இதில் ‘வடக்குபட்டி ராமசாமி’யாக சந்தானம் நடித்திருப்பது நாம் அறிந்ததே. கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர் கோயில் பெயரைச் சொல்லி மோசடிகளில் ஈடுபடுவதாக அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பையும் எதிர்ப்பையும் ஒருசேரக் கிளப்பியது.
அதனாலேயே, ட்ரெய்லர் பார்த்தவுடனே சிலர் இப்படத்தை எதிர்க்கவும் செய்தார்கள். அதற்குப் படத்தில் என்ன பதில் சொல்லியிருக்கின்றனர் என்று பார்த்தால், நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே.
‘ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்’ என கவுண்டமணி சொல்வது போன்று, சர்ச்சையைக் கிளப்பிய அந்த வசனத்தை வெறுமனே பரபரப்புக்காக மட்டுமே படத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி.
இடையிடையே வெடிச்சிரிப்பு!
’வருவேன், கலாய்ப்பேன், போய்க்கிட்டே இருப்பேன்’ என்ற உடல்மொழியைத் துறந்தபின்பு, ஒரு நாயகனாக வெற்றிக்கொடி நாட்டி வருகிறார் சந்தானம். அதில், ‘வடக்குபட்டி ராமசாமி’யும் இணைந்திருக்கிறது.
ஒரு கமர்ஷியல் படத்தில் நாயகி வேண்டுமே என்கிற கட்டாயத்தின் கீழ் மேகா ஆகாஷ் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது இருப்பு பெரிய மாற்றத்தைத் திரையில் ஏற்படுத்தவில்லை; அதேநேரத்தில், அவரை ஹோம்லியாக காட்டுவதா? இல்லை கிளாமராக காட்டுவதா? என்று குழம்பியிருக்கிறார் இயக்குனர்.
சந்தானத்துக்கு அடுத்தபடியாக இந்த படத்தில் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது மாறன் – சேஷு கூட்டணி. ஆங்காங்கே அவர்கள் உதிர்க்கும் வசனங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
‘டிக்கிலோனா’வில் ‘இன்னும் என்னை பைத்தியம்னே நினைக்குற’ என்ற வசனம் மாறனின் திரை வாழ்வை எப்படி மாற்றியதோ, அதே போன்று இதில் சேஷு பரதநாட்டியம் ஆடும் காட்சி அமைந்திருக்கிறது. அக்காட்சியைப் பார்த்தால் வெடிச்சிரிப்பு நிச்சயம்.
ஜான் விஜய், ரவிமரியா, பிரசாந்த், ஜாக்குலின், கூல் சுரேஷ் உட்படப் பலர் இதில் முகம் காட்டியுள்ளனர். மேஜர் சந்திரகாந்த் எனும் வேடத்தில் நிழல்கள் ரவி அதகளம் செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இடம்பெற்றிருக்கிறார் மொட்ட ராஜேந்திரன்.
கண்ணி வெடி தொடர்பான காட்சியொன்றில் அவரது நடிப்பு சிரிப்பை வரவழைக்கும். மெட்ராஸ் வட்டார மொழியிலுள்ள ஒரு வசவு வார்த்தையைப் போன்று ஒலிக்கும் இன்னொரு வார்த்தையை அவரது பாத்திரம் அடிக்கடி உதிர்க்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம்.
எம்.எஸ்.பாஸ்கரின் பாத்திரத்தை நகைச்சுவையாகக் காட்டுவதா? அல்லது ஆன்மிகம் குறித்து கிளாஸ் எடுக்க வைப்பதா? என்று ரொம்பவே குழம்பியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. போலவே, பகுத்தறிவு பேசும் செம்புலி ஜெகன் பாத்திரத்தையும் பின்பாதியில் ‘டீலில்‘ விட்டிருக்கிறார்.
சந்தானத்தின் தாய் பாத்திரம், தெற்குப்பட்டி எனும் இன்னொரு கிராமம் உட்பட இக்கதையில் உள்ள சில முக்கிய அம்சங்களின் ‘பாலோ-அப்’பை மறந்திருக்கிறார் இயக்குனர்.
எழுபதுகளில் கதை நடப்பது போன்று காண்பிப்பதற்காக, ஒளிப்பதிவில் ‘கிளாசிக் பீல்’ கொண்டுவர முயற்சித்திருக்கிறார் தீபக். டிஐ நுட்பத்தைப் பயன்படுத்தி தகுந்த பலனைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். சிவா நந்தீஸ்வரனின் படத்தொகுப்பானது குழப்பமின்றித் தெளிவாகக் கதை சொல்ல உதவியிருக்கிறது.
ஷான் ரோல்டன் இசையில் ‘ஆப்ரக்கோ டாப்ராக்கோ’ மற்றும் ‘பரவுது’ பாடல்கள் காட்சிகளுக்குப் பதிலாகப் படத்தில் இடம்பெற்றுள்ளன. தொடக்கக் காட்சிகளில் ‘த்ரில்’ ஊட்டும் அவரது பின்னணி இசை, அதன்பிறகு முழுக்க ஒரு நகைச்சுவை பாத்திரம் போன்றே மாறியிருக்கிறது.
கலை இயக்குனர் ராஜேஷின் உழைப்பில் மொபைல், தொலைக்காட்சி, மோட்டார் சைக்கிள் இல்லாத உலகமொன்றைக் காண முடிகிறது. திரையில் செயற்கைத்தனம் தென்பட்டாலும், ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டு கிராமங்களைக் காட்ட அவரது குழுவினர் மெனக்கெட்டிருப்பதைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.
நகைச்சுவைப் படங்களில் ஆக்ஷன் கொரியோகிராபியும் அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்படும். மகேஷ் மேத்யூவின் சண்டைக்காட்சிகள் இப்படத்தில் அவ்வாறில்லாமல் நேர்த்தியை வெளிப்படுத்துகின்றன.
‘டிக்கிலோனா’ தந்த கார்த்திக் யோகி இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நடப்பது போன்று இப்படத்தைத் தந்திருக்கிறார். நிச்சயம் அடுத்த பாகம் உண்டு என்பதாகப் படத்தை முடித்திருக்கிறார்.
சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம்!
ஒரு படத்தில் நாயக பாத்திரத்தைக் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவோ அல்லது இல்லாதவராகவோ காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதனைக் குறிப்பிடும் வசனங்களால் சர்ச்சை உருவாகும் என்று அறிந்தால், நிச்சயமாக அதனைக் கவனமாகக் கையாள வேண்டும். ‘வடக்குபட்டி ராமசாமி’யில் அது நிகழவில்லை.
நாயகன் இக்கதையில் தனியார் நிலத்தில் கோயில் எழுப்புவதாகக் காட்டியிருப்பதும் கூட சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. போலவே, பகுத்தறிவே துணை என்றிருப்பவர்களுக்கு இப்படத்தின் முடிவும் நாயக பாத்திரத்தின் மனமாற்றமும் நிறைய கேள்விகளை உருவாக்கக்கூடும்.
ராஜ்குமார் ஹிரானியின் ’3 இடியட்ஸ்’ படம் போன்று மேற்சொன்ன விஷயங்களை விலாவாரியாக விமர்சிக்காமல் தவிர்த்திருக்கிறார் கார்த்திக் யோகி. அதற்குப் பதிலாக, ஒரு கேள்வியை எழுப்பிவிட்டுப் பதில் சொல்லாமல் நழுவிச் செல்கிறது அவரது திரைக்கதை.
’கடவுள் நம்பிக்கையோடு இருப்பதோ அல்லது அப்படியொன்று இல்லை என்று எதிர்ப்பதோ பிரச்சனை இல்லை; ஆனால், கடவுள் பக்தியை வைத்து மோசடியாகப் பணம் சம்பாதிப்பதும், எதிர்க்கிறேன் பேர்வழி என்று பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிப்பதும் நிச்சயம் தவறானது’ என்கிற தொனியில் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் பேசுவதாக ஒரு வசனம் உண்டு.
அந்த வார்த்தைகளை அடிக்கோடிட்டுக் காட்டுவது போன்று இரண்டொரு காட்சிகளைச் சேர்த்திருந்தால், வாய்விட்டுச் சிரிப்பதோடு கொஞ்சமாய் மனத்திருப்தியோடும் தியேட்டரை விட்டு வெளியேறும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இப்போது, லாஜிக் மீறல்களைப் புறக்கணித்துவிட்டு வெறுமனே சிரிக்கும் வாய்ப்பை மட்டுமே தந்திருக்கிறது இந்த ‘வடக்குபட்டி ராமசாமி’!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video: பறந்து வந்த மாலை… அடுத்து தளபதி செஞ்சது தான் ஹைலைட்!
உதயசூரியனில் நிற்கமாட்டோம்… திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் விசிக, மதிமுக: பின்னணி இதுதான்!