லியோ படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாகப் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் “லியோ” என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மாஸ்டர் படத்திற்குப் பிறகு 2வது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பிற்காகக் கடந்த ஜனவரி மாத இறுதியில் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்தனர். தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குநர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒரு அதிரடியான அப்டேட்டை கொடுத்துள்ளது லியோ படக்குழு.
அதன்படி, நடிகர் சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளதை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
அந்த வீடியோவில் விமானத்தில் இருந்து சஞ்சய் தத் இறங்கி வரும் போது படக்குழுவினர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் காரில் பயணித்துப் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அவரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் அனைவரும் வரவேற்றுப் பேசினர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படப்பிடிப்பிற்காக ”red v raptor xl” என்ற உயரிய தொழில்நுட்பங்கள் அடங்கிய கேமரா வரவழைக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அவர் பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
’துரோகி’ : எடப்பாடிக்கு எதிராக கோஷமிட்ட சக பயணி
”தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுமையிலும்…”- கோவையில் ஸ்டாலின் உறுதி!