நான் சினிமாவில் வருவதற்கு என் தந்தை ஒரு படிக்கல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் கடந்த 14 வருடங்களாக அதில் தொடர்வதற்கு திறமை தான் காரணம் என்று நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது வாங்கியதைத் தொடர்ந்து ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அதன்படி ஒரு தனியார் ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ராம்சரண் நேற்று (மார்ச் 17) டெல்லி சென்றிருந்தார்.
அப்போது தனது தந்தை சிரஞ்சீவியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராம்சரண். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில் அவரது தந்தையும், தெலுங்கு திரையுலகில் உச்சநட்சத்திரமுமான சிரஞ்சீவி துணையால் தான் அவர் சினிமாவில் இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ளதாக சமூகவலை தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே இந்திய திரையுலகில் நெப்போட்டிஸம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஊடக கருத்தரங்கில் அதுகுறித்து கேள்வி எழுந்தபோது நடிகர் ராம்சரண் விரிவான பதிலை அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், “நெப்போட்டிஸம் என்பது என்ன என்று உண்மையில் எனக்கு புரியவில்லை. இது ஒரு மந்தையின் மனநிலை. நெப்போட்டிஸம் என்ற பேச்சு தொடர்ந்து ஒரு மந்தையால் இயக்கப்படுகிறது அதாவது குறிப்பிட்ட ஒரு சிலரால் கூறப்பட்டு வருகிறது.
எனக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பதில் பெரும் ஈடுபாடு உள்ளது. நான் சினிமாவை சுவாசித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் நான் பல்வேறு தயாரிப்பாளர்களைச் சந்தித்தேன்.
பிறந்தது முதல் திரைப்படத்துறை சார்ந்த குடும்பத்தில் இருந்து வருகிறேன். எனவே எனக்கு சினிமா குறித்து சிறுவயதில் இருந்தே தெரியும். மேலும் இங்கு எந்த கலைஞரும் திறமை இன்றி வெற்றி பெற முடியாது” என்று ராம் சரண் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “திரைத்துறையில் என் பணியை சிறப்பாக செய்திருக்காவிட்டால் நான் கடந்த 14 ஆண்டுகள் நீடித்திருக்க மாட்டேன். என் அப்பா நான் திரைத்துறையில் வருவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதில் பயணத்தைத் தொடர வேண்டும் என்றால் திறமை தான் முக்கிய காரணம்.
நான் ஒரு சாதாரண மனிதனாக இருந்தால், யாரோ ஒருவரின் மகன் என்பதற்காக தியேட்டருக்கு வெளியே 100 அல்லது 500 ரூபாய் செலவழிக்க மாட்டேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படப்பிடிப்பின் முதல் நாளில் தந்தை சிரஞ்சீவி தனக்கு அளித்த அறிவுரையையும் பகிர்ந்து கொண்டார் ராம் சரண்.
அவர் கூறுகையில், “நான் கேமிராவுக்காக நின்ற முதல்நாளில், அவர் எனக்கு சிறப்பாக நடிப்பதற்கு ஏதாவது ஒரு நல்ல டிப்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர், ’இது உன்னுடைய முதல் நாள். உனது டீமை நன்றாக கவனித்துக்கொள். அவர்கள் தான் உன்னோடு இருக்கிறார்கள். அவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்.” என்றுதான் தெரிவித்தார்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வி.ஹெச்.பி மாவட்ட செயலாளர் மீது குண்டர் சட்டம்!
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு!