லவ் டுடே திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனை இன்று (நவம்பர் 12) நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார்.
கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், தானே இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகிபாபு, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் இணைந்து ‘ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
காதல் கலந்த நகைச்சுவை கதை களத்துடன் உருவாகியுள்ள இந்த படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தினை பலரும் பாராட்டி வரும் நிலையில் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் லவ் டுடே படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.
லவ் டுடே படத்தைப் பார்த்த அவர், அப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “இதை விட வேறு என்ன கேட்க முடியும். ஒரு சூரியனின் அருகில் இருந்தது போன்ற உணர்வைக் கொடுத்தது. இறுக்கமான அணைப்பு, அந்த கண்கள், சிரிப்பு, ஸ்டைல் மற்றும் அன்பு. என்ன ஒரு ஆளுமை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லவ் டுடே படத்தைப் பார்த்து என்னை வாழ்த்தினார். நீங்கள் சொன்ன வார்த்தைகளை நான் மறக்க மாட்டேன் சார்” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
தீர்ந்தது நிலக்கரி… மூடப்படும் என்.எல்.சி.: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்