”சகுனிகள் வாழும் சமூகத்தில் நியாயவாதியாக இருக்க கூடாது” – ரீசன் சொன்ன ரஜினி
ஜெய்பீம் பட வெற்றிக்கு பின் த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், அபிராமி, ரித்திகா சிங், பகத்பாசில், துஷாரா விஜயன், ராணா டகுபதி, நடித்திருக்கும் வேட்டையன் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 20) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. காலையில் நடிகர் விஜய் தனது கட்சியின் மாநில மாநாட்டுக்கான தேதியை அறிவித்த நிலையில், ஊடகங்கள் கவனம் அதனை நோக்கி இருந்தது.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டுக்கு பின் ரஜினிகாந்த் பங்கேற்கும் திரைப்பட விழா என்பதால், ரஜினிகாந்த் பரபரப்பாக ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்த சூழலில், சகுனிகள் வாழும் சமூகத்தில் நியாயவாதியாக இருக்க கூடாது. சாணக்கியதனமும், சாமர்த்தியமும் தேவை என பேசி ரஜினி அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.
நிகழ்ச்சியில் ரஜினி பேசியபோது, “ஒரு நல்ல படத்தை இயக்கும் இயக்குநர்கள் இங்கு இல்லை. அவர்களை தேட வேண்டி உள்ளது , நான் நடிக்க வந்த காலத்தில் கதை ஒருவர், வசனம் ஒருவர், இயக்கம் ஒருவர் என தனித்தனியாக இருந்தது. நல்ல படங்கள் வந்தது. இப்போது எல்லாமே ஒருவர் என்கிற சூழல் உருவாகி விட்டது. அதனால் நல்ல இயக்குநர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அப்படி கண்டுபிடிக்கப்பட்டவர் தான் ஞானவேல்.
இங்கே தோல்வி என்பதை காட்டிலும் வெற்றியை தொடர்வதும், தக்க வைத்துக் கொள்வதும் பெரும் போராட்டமாக உள்ளது. ஒரு படம் தோல்வி என்றால் அடுத்த படம் ஹிட் கொடுக்கும் வரை நிம்மதி இருக்காது. அதே போல் ஹிட் படம் கொடுத்து விட்டால், அதை விட ஹிட் தர வேண்டும் என்ற பதட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
அதிலும் படத்தின் வசூல் சாதனை என்றாகிவிட்டால், அடுத்த படத்தில் அதனை எட்டிப் பிடிக்க வேண்டும். இல்லை என்றால் கிரிக்கெட் வீரர் போன்று பார்மில் இல்லை என கூறிவிடுவார்கள்.
அந்த வகையில் ஜெயிலர் என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்த பின்னர் நான் நடிக்கும் அடுத்த முழு நேர படம் வேட்டையன். அதனால் டென்சன் ஆகி விட்டேன். ஏனென்றால் நல்ல இயக்குநர் கிடைப்பது கடினமாகி வருகிறது. இயக்குநர் ஞானவேல் சொன்ன கதை பிடித்தது. அவரது முந்தைய படமான ஜெய்பீம் என்னை மிகவும் ஈர்த்தது.
நல்ல கதை இருக்குமா என்று கேட்டேன். சார், என் ஸ்டைலில் உங்களை ரசிக்க வைக்க முடியும் என்றார். எனக்கு அதுதான் வேண்டும் என்று சொன்னேன். அப்போது தொடங்கியது வேட்டையன் பயணம். கீழே விழுந்தாலும் உடனே எழுந்து மேலே வர வேண்டும்.
யார் நம்மை தலையில் மிதிக்க நினைக்கிறார்களோ அவர்களை மிதித்து முன்னேற வேண்டும். காசு என்ற சாமிதான் முக்கியம். சகுனிகள் உள்ள சமுதாயத்தில் நியாயவாதியாக இருந்தால் நிச்சயம் பிழைக்க முடியாது. சாணக்யத்தனமும் தேவை சாமர்த்திய தனமும் தேவை. இரண்டும் இருந்தால் மட்டுமே இங்கே பிழைக்க முடியும்” என்றார்.
த.செ.ஞானவேல் பேசியதாவது, “இந்த இடத்தில் நான் இப்போது நின்றுகொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் சூர்யா தான். அதற்காக இந்த விழாவின் மூலம் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எல்லாருக்கும் ரஜினி படத்தில் ஒரு ஸ்டைல் காட்சி பிடிக்கும். எனக்கு ‘படையப்பா’ படத்தில் வரும் ஊஞ்சல் சீன் மிகவும் பிடிக்கும்.
அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதினேன். எல்லா தலைவர்களுக்கும் சரியான தொண்டர்கள் கிடைப்பார்கள் ஆனால், எல்லா தொண்டர்களுக்கும் சரியான தலைவன் கிடைப்பதில்லை. அப்படி சரியான தலைவனாக கிடைத்து இருப்பவர் தான் ரஜினிகாந்த்.
எப்படி எப்போதும் முதல் இடத்தில் இருக்கிறீர்கள் என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘அட்ஜஸ்ட், அக்காமடேட், அடாப்ட்’. இந்த மூன்றும்தான் அதற்கு காரணம்’ என்று சொன்னார். தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். அதே நேரம் டிக்கெட் எடுத்து பார்க்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு கிடைக்கவேண்டும். இது இரண்டையும்தான் படப்பிடிப்பு முழுக்க ரஜினிகாந்த் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அது எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது. அவருக்கு தெரிந்த ரசிகர்களை விட தெரியாத ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். அதில் நானும் ஒருவன். சுபாஸ்கரனிடம் நான் கதை சொன்ன காலகட்டத்தில், பங்குச் சந்தையில் அவர் பணத்தை இழந்திருந்தார். அந்த நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது, லேப்டாப்பை மூடிவிட வேண்டியதுதான் என்று நினைத்தேன்.
ஆனால் அப்போதும் கூட கதை தனக்கு பிடித்திருப்பதாக கூறினார். சினிமா மீது அதீத காதல் இருக்கும் ஒருவரால்தான் இதை செய்ய முடியும். தமிழ் சினிமாவில் ஒருவர் நல்ல திரைப்படம் எடுத்தால், ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து பாராட்டுவார்.
‘ஜெய் பீம்’ படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்தே நான் அவரது அழைப்புக்காக காத்திருந்தேன். அவரை சந்திப்பதற்காகவே புதிய சட்டை ஒன்றை வாங்கி அணிந்து சென்றேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு சவுந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு மெசேஜ் செய்து அப்பாவுக்கு ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் இரண்டு கதைகள் இருந்தன. அதில் எனக்கு பிடித்த கதைதான் ரஜினிக்கும் பிடித்தது. அதுதான் ‘வேட்டையன்’” இவ்வாறு ஞானவேல் பேசினார்.
இராமானுஜம்
டிஜிட்டல் திண்ணை: நிர்மலா நடத்திய ரகசிய மீட்டிங்! லண்டனில் அண்ணாமலை ஷாக்… பாஜகவில் திடீர் மாற்றம்!
பழனி பஞ்சாமிர்தம்: விலங்கு கொழுப்பு நெய் பயன்படுத்தப்படுகிறதா? – சேகர்பாபு விளக்கம்!