சின்மயி வந்தால் ‘காம்பவுண்டுக்குள்ளேயே’ விட மாட்டோம்: ராதாரவி

சினிமா

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு, நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 17-ம் தேதி நடக்கவுள்ளது.

36 வருடங்களாக ராதாரவியுடன் இருந்த ஸ்ரீலேகா ராஜேந்திரன் இந்த தேர்தலில் ராதாரவியை எதிர்த்து போட்டியிடுகிறார். இது மட்டுமின்றி ராதாரவியின் நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் டப்பிங் யூனியன் தேர்தல் தொடர்பாக தலைவரும், நடிகருமான ராதாரவி இன்று (மார்ச் 2) தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ”இந்தமுறை நடக்கும் டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. எதிரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில் தான் பார்க்கிறேன்.

அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு யூனியன் என்றால், என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்ல வேண்டும். நான் தைரியமாக தன்னம்பிக்கையோடு இருக்கிறேன்.

நிச்சயமாக நம் அணி பெரிய அளவில் வெற்றி பெறும். இருந்தாலும் புதிய முகங்களையும், பழைய முகங்களையும் தேர்தலில் நிறுத்துகிறோம்.

ஆர்வம் இருப்பவர்களை சேர்த்துக் கொள்வேன். இந்த முறையும் எனக்கு வாக்களித்து ராதாரவி தலைமையிலான அணி வெற்றி பெற்றால் தான் சந்தோஷம்”,என்றார்.

தொடர்ந்து ‘லியோ’ படத்தில் பாடகி சின்மயி நடிகை திரிஷாவிற்கு டப்பிங் பேசியது குறித்து ராதாரவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ”சின்மயியை டப்பிங் கொடுக்க வைத்ததற்கான அபராதத்தை லோகேஷ் கனகராஜ்தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. டப்பிங் யூனியனின் விதிமுறைகள் குறித்து அவருக்கும் தெரியாது.

விவகாரம் தொடர்பாக, நான் போன் பண்ணி சொன்னதும் ஒப்புக் கொண்டார். அபராதத்தொகை யூனியனுக்கு வந்துவிட்டது, அதுபோதும்,”என்றார்.

தொடர்ந்து, சின்மயியை மீண்டும் யூனியனில் சேர்த்துக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் கதிர், “சின்மயியை நாங்கள் வெளியே அனுப்பவில்லை. ஒவ்வொரு வருடமும் சந்தா கட்ட வேண்டும். கட்டவில்லை என்றால் மெம்பர்ஷிப் காலாவதியாகிவிடும். தான் சந்தா கட்டாததால் தனது உரிமையை அவரே இழந்து விட்டார்” என்றார்.

இதற்கு ராதாரவி, ‘சின்மயி மீண்டும் வந்தால் நிச்சயமாக அந்த காம்பவுண்டில் கூட சேர்க்க மாட்டோம்” என்று காட்டமாக பதிலளித்தார்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடியோடு அரசு நிகழ்வு: மீண்டும் தவிர்க்கும் ஸ்டாலின்

பாஜக முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *