நடிகர் பிரித்விராஜுக்கு இன்று அறுவை சிகிச்சை!
படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் பிரித்விராஜுக்கு இன்று (ஜூன் 26) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
கடந்த 2002-ல் மலையாலத்திலும் 2006-ல் தமிழிலும் அறிமுகமாகி பிரபல நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். இயக்குநர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் உருவாகி வரும் வினயாத் புத்தா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்து வருகிறார்.
பல நாட்களாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி 50 நாள் படப்பிடிப்பை படக்குழு மறையூர் பகுதியில் நடத்தி வந்தது.
நேற்று வினயாத் புத்தா படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த காட்சியில் நடிகர் பிரித்விராஜ் மிகவும் உயரத்தில் தொங்கியபடி சண்டை போடுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
மிகவும் ரிஸ்க் எடுத்து இந்த காட்சியில் பிரித்விராஜ் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் அவரை மீட்டு கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இன்று அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பிரித்விராஜ் 2 முதல் 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வினயாத் புத்தா படத்திற்கு மலையாள ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் விபத்து காரணமாக படப்பிடிப்பு தாமதமாவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ரசிகர்கள் பலரும் ‘get well soon’ என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மோனிஷா
அமெரிக்கா, எகிப்து பயணங்கள்: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
சில்லறை விற்பனையில் ரூ.100-ஐ எட்டும் தக்காளி: காரணம் என்ன?