சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை என்று இயக்குனர் பேரரசு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்த பார்க் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் எடுத்துள்ளார்கள். என்னைவிட வயதானவர்கள் எல்லாம் கதாநாயகனாக நடிக்கும் போது ,எனக்கு மட்டும் அமைச்சர் முதல் மந்திரி என்று வேடம் கொடுக்கிறார்கள்.
எனக்கும் இப்போது கதாநாயகன் ஆசை வந்துவிட்டது. தமன் போன்றவர்கள், கதாநாயகர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் போது எனக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. நான் இயக்கிய போதே நடிக்க வாய்ப்பு வந்தது. என் உதவி இயக்குநர்கள் பொறாமையால் தடுத்து விட்டார்கள்.
எத்தனைக் கோடியில் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். அது அவரவர் விருப்பம் .ஆனால் அதைவிட அதில் நல்ல கதை இருக்க வேண்டும், திரைக்கதை இருக்க வேண்டும். எது இருக்க வேண்டுமோ அது இருக்க வேண்டும். நான் கிழக்கு வாசல் ஒன்றரை கோடியில் எடுத்தேன், சின்ன கவுண்டர் இரண்டரைக் கோடியில் எடுத்தேன்.
எஜமான் நான்கு கோடியில் எடுத்தேன் .அதனால் கோடி என்பது பிரச்சினை இல்லை. அதில் என்ன கதை இருக்கிறது என்பதுதான் முக்கியம். சினிமாவில் வருவதற்கு கஷ்டப்படுகிறார்கள். கஷ்டம் அனுபவத்தைத் தரும். அந்த அனுபவம் தான் நமது வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் . எனக்கும் பாடல் எழுத வாய்ப்பு வருகிறது. இன்று வருவதெல்லாம் உயிர் இல்லாத பாடல்களாக உள்ளன. நல்ல மெட்டு கொடுத்தால் தான் நல்ல வரிகள் எழுத முடியும், இது எனது அனுபவம் “என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள். இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .
அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம்.
இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார்.சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை” என்றார் பேரரசு.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது: தமாகாவில் இருந்து ஹரிகரன் நீக்கம்!