உதய் பாடகலிங்கம்
பசுபதி. தமிழ் திரையுலகம் கண்டெடுத்த அற்புதமான கலைஞர்களில் ஒருவர்.
நடிப்புக் கலையை 360 டிகிரியிலும் வெளிப்படுத்த வேண்டுமென்ற வேட்கை கொண்டவர்.
எடுத்துக்கொண்ட பணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர். இயற்கையோடு இயைந்த வாழ்வு மீது காதல் கொண்டவர். வாழும் சமூகத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர்.இப்படிப் பசுபதியைப் புகழத் தொடங்கினால் வார்த்தைகளுக்குப் பஞ்சமே இருக்காமல் செய்துவிடும் அவரது இயல்பான திறமையும் ஆர்வமும்.
1969ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை வண்ணாந்துறையில் பிறந்தவர் பசுபதி. இவரது இளமைக்காலம் முழுவதும் மதுரவாயல் பகுதியைச் சுற்றி அமைந்தது.
தஞ்சாவூர் அருகிலுள்ள திருமங்கலக்கோட்டை இவரது குடும்பத்தின் பூர்விகம். என்றபோதும், கிராமத்தையும் நகரத்தையும் சேர்த்துக் குழைத்த வாழ்பவனுங்களே அவருக்கு வாய்த்தன.
பள்ளிப்படிப்பை முடித்துப் பணி தேட வேண்டிய வயதில் தெருக்கூத்து, நாடகங்களில் பங்கேற்கும் ஆர்வம் பசுபதியைத் தொற்றியது. அதற்கொரு வடிகால் தேடும் விதமாக, 1984இல் ‘கூத்துப்பட்டறை’ நாடகக்குழுவில் இணைந்தார். அப்போது பசுபதியைப் போன்று மிகச்சிலரே அதில் அங்கம் வகித்தார்கள். ஆனால், விளக்கின் மொத்த ஒளியையும் அங்குலம் அங்குலமாகத் தம் மீது படர அனுமதிப்பதைப் போல, நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் அவர்கள் அங்கு அறிந்து கொண்டனர்.
நடிப்போடு சேர்த்து ஓவியம், சிற்பம், எழுத்து தொடங்கி அனைத்து வகை ஆவணப்படுத்துதலையும் கற்றுக்கொண்டார் பசுபதி.
மேடையின் மீது நடிப்புக்கலைஞர்கள், தங்களை மக்கள் அடையாளம் காணும்விதமாக அமைந்த அத்தனை பணிகளையும் அறிந்து, புரிந்து, அதனைச் செய்யும் ஆற்றல் படைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது. ’ஆல்ரவுண்டர்’ ஆகத் தெரிந்தவர்க்கு மைதானத்தில் எந்த மூலையிலும் கரகோஷம் காத்திருக்கும் என்ற சூட்சமம் அதன் பின்னிருக்கிறது.அந்த குருகுல வாச காலம் செலவல்ல, வரவு என்ற மனப்பாங்கு பசுபதி போன்றே அன்று அங்கிருந்த அவரது தோழமைகளிடமும் நிறைந்திருந்தது. அதனாலேயே, கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டு காலம் கூத்துப்பட்டறையோடு அவரால் இணைந்திருக்க முடிந்தது.
’முனிவர்கள் தவம் செய்வார்கள் கால வேறுபாட்டை மறந்து’ என்று நாம் அறிந்த கற்பிதங்களுக்கு ஒப்பானது அது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா போன்ற ஜாம்பவான்களுக்கு முந்தைய தலைமுறை நடிகர்கள் கைக்கொண்டிருந்த உத்தி அது.தொண்ணூறுகளின் பிற்பாதியில் கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது, நாசரின் அறிமுகத்தால் அதில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் பசுபதி. முதல் சினிமா வாய்ப்பு கைகூடாதபோதும், அந்த உலகத்தின் கதவுகளை அவரை அறியாமலேயே திறந்தார்.
பார்த்திபன் இயக்கிய ‘ஹவுஸ்ஃபுல்’ படத்தில் முதன்முறையாகத் தோன்றினார் பசுபதி. அது பெயர் சொல்லத்தக்க வகையில் அமையவில்லை.ஆனால், அதன் தொடர்ச்சியாக மாயன், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் நடித்தார். பிறகு வந்த ‘தூள்’, ‘இயற்கை’ படங்கள் பசுபதி யார் என்பதை ரசிகர்களுக்கு வெளிக்காட்டும் வகையில் அமைந்தன.
ஒரு படத்தில் ரவுடி, இன்னொரு படத்தின் தேவாலயப் பங்குத்தந்தை. இரண்டு வேடங்களிலும் மிகப்பொருத்தமாகத் தெரிந்தார்.ஆனால், அவரது தோற்றம் மட்டும் இரண்டிலும் ஒரேமாதிரியானதாக இருந்தது. அது, அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை தெரியப்படுத்தியது.

2004ஆம் ஆண்டு ‘விருமாண்டி’யில் கமல் தந்த கொத்தாளத் தேவர் பாத்திரம், திரையுலகில் பசுபதி பெற வேண்டிய இடம் எதுவென்று அடையாளம் காட்டியது.
இடைப்பட்ட அந்த ஐந்தாண்டு காலத்தில், தனக்குக் கிடைத்த வில்லன் வாய்ப்புகள் அனைத்தையும் அவர் ஏற்கவில்லை. மாறாக, தனக்கான கதைகளையும் பாத்திரங்களையும் நிதானமாகத் தேர்ந்தெடுத்தார்.
அந்த பக்குவம் அவரை அடுத்தடுத்த படிக்கட்டுகளில் ஏற்றி அழகு பார்த்தது.
சுள்ளான், மதுர, மச்சி, திருப்பாச்சி படங்களில் வழக்கமான வில்லனாகவே அவர் தோன்றினார். அவற்றில் அவரது நடிப்பு ஒரேமாதிரியாகத் தெரியாது. ஆனாலும், ரசிகர்கள் அவர் அப்படி நடிப்பதாகவே நினைத்தார்கள்.‘இனி வாழ்நாள் முழுக்க ஏய்.. என்று கத்தி வில்லத்தனம் தான் காட்ட வேண்டுமா’ என்று அவர் வருந்தியிருப்பாரா? நமக்குத் தெரியாது.
ஆனால், அப்படியொரு நிலை வந்துவிடக்கூடாது என்ற முனைப்புடன் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ஸில் பசுபதியை சிதம்பரம் ஆக்கி அழகு பார்த்தார் அதன் தயாரிப்பாளர் கமல்ஹாசன். இந்த முறை காமெடியில் ‘சிக்சர்’ அடித்தார்.மஜா’விலும் விக்ரம், மணிவண்ணனுடன் இணைந்து முழுக்க நகைச்சுவை கலந்த பாத்திரத்தில் நடித்தார்.
2006இல் வெளியான ‘வெயில்’ நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைப் பசுபதி வெளிப்படுத்தக் காரணமானது. வாழ்நாள் முழுக்கப் புறக்கணிப்பின் வலியை உணர்ந்தவராக அப்படத்தில் தோன்றியபோது, ‘மனிதர் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்று புகழ்ந்தார்கள் ரசிகர்கள்.
அதற்கடுத்து வந்த ‘ஈ’ படத்தில் நெல்லை மணி எனும் பாத்திரத்தில் பசுபதியை நடிக்க வைத்தார் இயக்குனர் ஜனநாதன். ஆக்ஷன் பாத்திரங்களும் கமர்ஷியல் கதைகளும் கூட அவருக்குக் கைவரும் என்று காட்டியது அப்படம்.தொடர்ந்து ராமன் தேடிய சீதை, குசேலன், வெடிகுண்டு முருகேசன் என்று மக்கள் மனம் தொட்ட படங்களில் இடம்பெற்றார் பசுபதி. அந்த காலகட்டத்தில், நடிப்புலகில் இருந்து சிறிது விலகியிருக்கவும் முடிவு செய்தார்.மூன்றாண்டுகளுக்குப் பிறகு அரவான், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று மீண்டும் தொடர்ந்தது பசுபதியின் ‘பார்ம்’.
அதன்பிறகு அவர் நடித்த படங்கள் சிறிய பட்ஜெட்டில் தயாரானவையாக, பெரிதாகக் கவனத்தைப் பெறாதவையாக அமைந்தன. ஆனாலும், அப்படங்களின் கதைகளும் அவர் ஏற்ற பாத்திரங்களும் வழக்கத்திற்கு மாறானதாக இருந்தன.
பத்து எண்றதுக்குள்ள, கொடிவீரன், அசுரன் என்று தொடர்ந்த பசுபதியின் திரை வாழ்வில் இன்னொரு மைல்கல் ஆக அமைந்தது ‘சார்பட்டா பரம்பரை. இதில் ரங்கன் வாத்தியார் பாத்திரத்தில் அவரைப் பொருத்தி அழகு பார்த்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.
இன்றளவும் அவரும் ஆர்யாவும் நடித்த காட்சிகள், ஷாட்கள், பிரேம்கள் ரசிகர்களுக்கு ‘மீம்ஸ்’களுக்கான கருப்பொருளை அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில், ராம் சங்கையா இயக்கிய ‘தண்டட்டி’ திரைப்படம் பசுபதியை நீண்டகாலத்திற்குப் பிறகு கதை நாயகன் ஆக்கியது. அது உருவாக்கிய பரவசம் அடங்குவதற்குள் ‘தங்கலான்’ திரைப்படம் அவரது இன்னொரு பரிமாணத்தை நாம் காணச் செய்திருக்கிறது.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார் பசுபதி. அந்த அனுபவங்கள் அவரை ‘பான் இந்தியா நடிகர்’ ஆகவும் மாற்றியிருக்கிறது. ஆனாலும், ஒரு படத்தில் இடம்பெற வேண்டுமா இல்லையா என்பதைத் தனது விருப்பமே முடிவு செய்யும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் பசுபதி.
இயற்கை வேளாண்மைக்கும் தனது தனிப்பட்ட வாழ்வுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்.ஒரு முழுமையான மனிதனே சிறப்பான கலைஞனாகத் திகழ முடியும் என்ற எண்ணமே அதன் பின்னிருக்கிறது.ஒவ்வொரு படத்திலும் தான் ஏற்ற பாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுகிற அளவுக்குத் திரையில் நுட்பங்களை வெளிப்படுத்தியவர் பசுபதி. அதில் அவர் கொண்டிருக்கிற தீர்மானமும் அதற்காக எடுத்துக்கொண்ட கால அவகாசமும் நிச்சயம் பொருளாதாரரீதியில் பல இழப்புகளைத் தந்திருக்கும்.
குறைந்தபட்சமாக, அவர் அடைய வேண்டிய உயரங்களை மட்டுப்படுத்தியிருக்கும். அதையும் மீறித் தொடர்வதற்கு, கலை மீதான பெருங்காதலே காரணமாக இருக்கும்.
இன்றளவும் கூட, சுயதிருப்தி அடைய முடியாத அளவுக்கு இன்னும் பல கதைகள், பாத்திரங்கள் பசுபதிக்காகக் காத்திருக்கின்றன. அவரைக் கொண்டாடச் செய்வதற்கான அந்த வாய்ப்புகள் புதிய இயக்குனர்களின் மனதில் பூட்டிக் கிடக்கின்றன.
உடலையும் மனதையும் இளமையாக்கத் தெரிந்த கலைஞர்களுக்குக் காலம் கொடுக்கும் அவகாசம் பெரியது. பசுபதிக்காகக் காத்திருக்கும் கதைகளைப் போலவே, திரையில் அவர் ஆக்கும் மாயஜாலங்களை ரசிக்க நாமும் காத்திருப்போம்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்… ஸ்டாலின் அறிவிப்பு!
ஆன்ட்ராய்டில் புக் செய்தால் ஒரு கட்டணம்: ஐபோனில் புக் செய்தால் விலை அதிகம்… வாடகை கார் தில்லாலங்கடி?