சில நாட்களுக்கு முன் நடிகை நயன்தாரா – தனுஷ் இடையே நடந்த காபிரைட்ஸ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவு அளித்ததற்கான காரணம் குறித்து மலையாள நடிகை பார்வதி திருவொத்து மனம் திறந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு மலையாள பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், ’நான் அந்த விவகாரத்தில் நயன்தாராவுடன் துணை நிற்க வேண்டும் என சற்றும் யோசிக்காமல் முடிவெடுத்தேன்.
அவரது அந்த பதிவைப் பார்த்தேன். பார்த்த உடனே எனக்கு அதை பகிர வேண்டும் எனத் தோன்றியது. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா போன்ற ஒரு சுயத்தால் வளர்ந்த பெண் இப்படி ஒரு மூன்று பக்க அறிக்கையை வெளியிடுவதிலேயே அந்த சூழலின் நெருக்கடி குறித்துத் தெரிகிறது. நம் அனைவருக்கும் அவரைத் தெரியும். அவர் சம்மந்தமே இல்லாமல் பேட்டி கொடுக்கவோ, அறிக்கை வெளியிடவோ மாட்டார்.
மேலும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திக்கவிருப்பதாக நயன்தாரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆக, இந்த விவகாரத்தில் நான் அவருக்கு ஆதரவு அளிப்பது முக்கியம் என நினைக்கிறேன். இப்போதும் அவருக்கு துணையாகவே நிற்கிறேன். வேறு சிலர் அவருக்கு ஆதரவு அளித்ததற்கு நான் காரணம் அல்ல. அவரது வார்த்தைகளில் இருந்த உண்மையைக் கண்டதால் மற்றவர்களும் நயன்தாராவுக்கு ஆதரவு அளித்திருக்கக் கூடும் என நினைக்கிறேன்’ எனப் பேசியுள்ளார்.
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு மற்றும் நயன்தாராவின் திரை வாழ்க்கை குறித்தான ஆவணத் திரைப்படமான ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படம் வெளியாவதற்கு முன் இதில் இடம்பெற்ற ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளுக்காக நடிகர் தனுஷ் என்.ஓ.சி கொடுக்க மறுத்த விவகாரம் குறித்து மூன்று பக்கம் அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை நயன்தாரா வெளியிட்டார். அந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் தங்களை மனவேதனைக்குள்ளாக்கியதாகவும், தன் ரசிகர்களிடம் ஒரு போலி பிம்பத்தை அவர் காட்டி வருவதாகவும் நயன்தாரா குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த அறிக்கை கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சில திரை பிரபலங்கள் தனுஷ் தரப்பிற்கு ஆதரவு அளித்து பதிவுகள் வெளியிட, நடிகை நயன்தாராவிற்கு ஆதரவாக மலையாள நடிகை பார்வதி திருவொத்து உட்பட பல மலையாள நடிகை ஆதரவு அளித்து அந்த அறிக்கையை தங்களது பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். நடிகர் தனுஷ் இந்த விவகாரம் குறித்த சட்ட ரீதியான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
‘பச்சன்’ குடும்ப பெயரை துறந்தாரா ஐஸ்வர்யா? : துபாயில் நடந்த அந்த சம்பவம்!
சொல்வதெல்லாம் உண்மை… அன்னபூரணியின் அடுத்த திருமணம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….