நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மற்றவர்களின் அணுகுமுறை, செயல்பாடுகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு மெனக்கெடுவார். actor parthiban share his angry
மிக் ஜாம் புயல் பாதிப்பு சம்பந்தமாக இதுவரை தமிழக அரசியலில் இல்லாத வகையில் நடிகர் விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன், நடிகர் விஜய் ஆகியோர் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
https://twitter.com/Minnambalamnews/status/1732268511127535696
இது போன்ற பேரிடர் காலங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவரும் களத்தில் இருப்பதுடன், அரசு வேண்டுகோள் விடுக்கும் முன்பே பேரிடர் நிவாரண நிதி தொகையை போட்டிபோட்டு அறிவித்தவர்கள்.
அவர்களுக்கு பின் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜீத்குமார், விஜய் ஆகியோரிடம் இருந்து இது போன்ற அறிவிப்புகள் தாமாக வெளியானது இல்லை. தமிழ்நாடு அரசு வேண்டுகோள் அல்லது அரசு சம்பந்தபட்டவர்களுக்கு அழுத்தம் கொடுத்த பின் தான் அறிவிப்புகள் வெளியாகும்.
பொத்தாம்பொதுவாக தங்கள் ரசிகர் மன்றம் மூலம் நிவாரண பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்றுங்கள், தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என கமல்ஹாசன், விஜய் இருவரும் தங்கள் X பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.
https://twitter.com/Minnambalamnews/status/1732627675670618553
நடிகர் ஹரிஷ் கல்யாண் முதல்நபராக பேரிடர் நிவாரண நிதியாக 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
https://twitter.com/iamharishkalyan/status/1732301645944680559
வழக்கம்போல நடிகர் மன்சூர் அலி கான் வெள்ளத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர்களில் இருந்து நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு உணவு பொட்டலங்களுடன் தான் பிறந்து வளர்ந்த சென்னை சைதாப்பேட்டை பகுதிக்கு நேற்று (டிசம்பர் 6) மாலை சென்றுள்ளார் நடிகர் பார்த்திபன்.
இதுகுறித்து ஊடகத்திற்கு அனுப்பிய செய்தியில், “இயன்றதை அனைவரும் செய்வோம். நேற்று மதியம் (6.12.2023) பனகல் மாளிகை அருகே, சுவையான உணவு வழங்கினோம். அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது.
நான் ஒரு குட்டியானை எனப்படும் மூனே முக்கால் சக்கர வாகனத்தில் சென்றேன். எனவே சுருங்கிவிட்டது என் பயணமும் பயனாளிகளும்.
படகு இருந்தால் மட்டுமே பல பகுதிகளுக்கு செல்ல முடியும். ஆகையால் நாளை அதற்கான முயற்சி.
நாளைய விஞ்ஞான வளர்ச்சியை பெருமையாக பார்க்கும் நாம், அதையெல்லாம் துடைத்து தூர போட்டுவிட்டு, தனியொருவனுக்கு (அதுவும் தண்ணீர் வயிறளவு ஓடும் போது) உணவில்லையெனில்….. வெட்கக்கேடு! ஜெய்ஹிந்த்!” எனக் குறிப்பிட்டிருந்தார் பார்த்திபன்.
அதனையடுத்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர், சென்னையில் பெய்த கனமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தனக்கே உரிய பாணியில் விரிவாக விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில், ”நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.
ஏன் இந்த அவல நிலை? சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பையிலும் (பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்) இதே நிலை.
தனி மனிதனாகவும், தமிழ்நாடாகவும், வல்லரசு(?) நாடாகவும், இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு!
தண்ணீர் இருக்கிறதா? என ஆராய சந்திரனுக்கு சந்திரயானும், செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்?
ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே?
அதிவேக புல்லட் ரயில், அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை urine போக! அடிப்படை தேவைகள், வேலை வாய்ப்புகள், சாலை வசதிகள், மாசற்ற காற்று, இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் இடரற்ற சக்தி, ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க, வழங்கும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு!
ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்ட போது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும், குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்களும் எதற்கு?
ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது.
நானோ, kpy பாலாவோ, அறந்தாங்கி நிஷாவோ இன்னும் சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்கு செய்தி சேர்க்குமே தவிர, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும், அதில் பொங்க அரிசியும் சேர்க்காது.
சமீபத்தில் கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்… இன்னும் 50 ஆண்டுகளில் என் காலத்திற்கு பிறகும் இந்தியாவிலேயே பறக்கும் கார்கள்(இப்போது மிதக்கும் கார்கள்) போன்ற அதியற்புத வளர்ச்சியை காணலாமென.
அதை விட… இந்திய வரைபடத்தில், வறுமை கோடும் அதனடியில் சில எலும்புக் கூடும் வாழும் நிலை மாற வேண்டும். (நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல.பொருளாதாரம் சார்ந்த அரசியலை.அதை சீர் செய்ய தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்!)
இது ஒரு தனிமனித சிந்தனை எனவே தவறு இருக்கலாம். இருப்பின் பொருட்படுத்தாதீர்கள். இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்!
தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும்.
என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ, ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல.
சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற… இனியொரு விதி செய்வோம்” என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெள்ளத்தில் கலந்த எண்ணெய் கழிவு.. ஆபத்தில் பொதுமக்கள்: காப்பாற்றுமா அரசு?
மழை பாதிப்பு: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த ராஜ் நாத் சிங்… முதல்வருடன் ஆலோசனை!
actor parthiban share his angry