பவண் கல்யாணுக்கு நாசர் பதிலடி!
தெலுங்கு நடிகர் பவண் கல்யாண் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘வினோதய சித்தம்’ . சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா இந்த படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்தபடத்தை ‘ப்ரோ’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி.
தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். இப்படம் நாளை (ஜூலை 28) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பவன் கல்யாண் பேசுகையில், “தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான் காரணம். எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும்போதுதான், அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது.
அது நம்மை குறுகிய வட்டத்துக்கு அடைத்து விடும். சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தெலுங்குப் படங்களை இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் ஏராளமான தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார்.
‘ப்ரோ’ படத்தில் கூட பல மொழிபேசும் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புதி விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்” என்று பவன் கல்யாண் பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பவண் கல்யாண் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 27) வெளியிட்டுள்ள வீடியோவில், “மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஒரு செய்தி மீடியாக்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் ஒரு தவறான செய்தி. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ் திரையுலகில் இருந்து இதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேவை இருக்கிறது. அதனால் இந்த சூழ்நிலையில் யாரும் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன்.
தமிழ் திரையுலகில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் படங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற சில சீரியஸான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதே தவிர கலைஞர்களின் திறமை மற்றும் நடிகர்களை பற்றியது அல்ல.
எஸ்.வி ரங்காராவ், சாவித்திரி, வாணி ஸ்ரீ போன்ற மற்ற திரையுலகில் இருக்கும் திறமையாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அன்பும் மரியாதையுடனும் கவனிக்கும் அளவிற்கு தமிழ் திரையுலகம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. அன்பான சகோதரர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் இந்த செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.. உலக அளவில் அதை கொண்டு செல்வோம். நம்மால் செய்ய முடியும் நாம் அதை செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறோம். அதனால் ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்” டிடிவி தினகரன்
மணிப்பூர் வீடியோ வழக்கு : சிபிஐக்கு மாற்றம்?