படத்தில் பாவம் … நிஜத்தில் கோரம்…. ஐந்தாம் படை நடிகரின் அட்டூழியத்தால் அதிர்ந்து போன மலையாளக் கரை

Published On:

| By Kumaresan M

இயக்குநர் சுந்தர் சி நடித்த ஐந்தாம் படை என்ற படத்தில் நடிகர் முகேஷ் அப்பாவியாகவும் மனைவியை தவிர வேறு எந்த பெண்களையும் ஏறெடுத்து பார்க்காத கண்ணியமான மனிதராகவும் நடித்திருப்பார். படத்தில் அப்படிப்பட்ட அப்பிராணி மீதுதான் நிஜத்தில் ஏராளமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

அவ்வளவு ஏன் முகேஷின் முன்னாள் மனைவியான சரிதாவே தனக்கு கணவரால் ஏற்பட்ட கொடுமைகளை அப்பட்டமாக வெளியே கூற தொடங்கியுள்ளார். தான் கர்ப்பிணியாக இருந்த போது , நடிகர் முகேஷ் வயிற்றிலேயே எட்டி உதைத்தாகவும் நடிகை சரிதா இப்போது கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள நடிகர் முகேஷும் நடிகை சரிதாவும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாகவும் நடிகர் முகேஷ் உள்ளார்.

ஏற்கனவே பல நடிகைகள் முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் முகேஷ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஆனி ராஜா, முகேஷ் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், முகேஷ் எம்.எல்.ஏ பதவியில் இருந்தால் அது விசாரணையை பாதிக்கும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆனிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முகேஷ் ராஜினாமா செய்யவில்லை என்றால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதை கண்டித்து ஊர்வலம் நடத்தும் முடிவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.நடிகர் முகேஷை கண்டித்தும் பதவி விலக கோரியும் இளைஞர் காங்கிரசாரும் திருவனந்தபுரத்தில் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.

நடிகைகள் மட்டுமல்லாமல் மூன்று பெண் எழுத்தாளர்களும் நடிகர் முகேஷ் மீது புகார் கூறியுள்ளனர். இதனால், எழுத்தாளர்கள் சாரா ஜோசப் , கே.ஆர்.மீரா, அஜிதா உள்ளிட்ட 100 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் முகேஷ் பதவி விலக வேண்டுமென்று ஆணித்தரமாக கூறியுள்ளனர்.

அந்த அறிக்கையில், மனைவியை தாக்கியது, தரங்கெட்ட தனிப்பட்ட வாழ்க்கை வாழ்வது, பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தை கடை பிடிக்காதவர், பணியிடத்தில் பாலியல் தொல்லை கொடுப்பவர், பாலியல் பலாத்காரம் செய்பவர் என்றும் முகேஷ் பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேலும், முகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்தால், மார்க்சிஸ்ட் கட்சி அவரை துரத்தியடிக்க வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

தமிழ் சினிமாவிலும் பாலியல் வன்கொடுமை : விரைவில் குழு – விஷால் அறிவிப்பு!

பழனியில் கிடைத்த 19ஆவது நூற்றாண்டு முத்திரைத்தாள்!

 

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share