மம்தா குல்கர்னி என்ற நடிகையை பாலிவுட்டும் தமிழ் சினிமாவும் மறந்திருக்கலாம். இவரை நடிகர் விஜய்யின் தாயார் ஷோபாதான் தமிழில் அறிமுகப்படுத்தினார் . நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் மிகச்சிறந்த இயக்குநர் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதே போல, விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் ஒரு இயக்குநர்தான்.
கடந்த 1991 ஆம் ஆண்டு நண்பர்கள் என்ற தமிழ்ப்படத்தை ஷோபா இயக்கினார். இந்த படத்தில்தான் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி தமிழில் அறிமுகமானார். இந்த படம் வணீகரீதியாக வெற்றி பெறவே செய்தது. பாலிவுட்டிலும் குறிப்பிடத்தக்க படங்களில் மம்தா நடித்தார். பின்னர், நடிப்பில் இருந்து காணாமல் போய் விட்டார். கடைசியாக ‘முன்னா பாய் ‘ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். 2000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் இருந்தும் அவர் வெளியேறி விட்டார்.
முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஏபிபி மீடியா நிறுவனத்துக்கு ஆன்லைன் வழியாக அளித்த பேட்டியில், “எனது தாயாரின் ஆதிக்கம் காரணமாகவே நான் சினிமாவில் நடிக்க வந்தேன். சினிமாவில் விரும்பி நடிக்கவில்லை. பிரஷ்ஷர் காரணமாகவே நடிப்பு துறையில் இருந்தேன். எனவே, சினிமாவுக்கு முழுக்கு போடுவது குறித்து நான் வருத்தப்படவில்லை” என்று மம்தா குல்கர்னி கூறியிருந்தார்.
இந்தியாவில் இருந்து வெளியேறிய மம்தா குல்கர்னி தென்னாப்பிரிக்காவில் விக்கி கோஷ்வாமி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியானது.விக்கி கோஷ்வாமி போதைப்பொருள் கடத்தும் தொழில் செய்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மும்பையை அடுத்த தானேவில் ஒரு கிலோ எபெட்ரின் என்ற போதைப் பொருளை வைத்திருந்ததாக இருவரையும் போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, மம்தா குல்கர்னி உள்பட மேலும் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக மம்தா, அவரின் கூட்டாளி விக்கிகோஷ்வாமி மீது வழக்கு பதியப்பட்டது.
கென்யாவில் போதை கடத்தல் கும்பல் நடத்தும் கூட்டங்களில் விக்கிகோஷ்வாமியுடன் சேர்ந்து மம்தாவும் பங்கேற்றதாக புகாரில் சொல்லப்பட்டது. இதன் காரணமாக தாய் நாடு திரும்பினால் கைது செய்யப்படலாம் என்பதால் மம்தா இந்தியா திரும்பாமல் வெளிநாட்டிலேயே இருந்தார்.
ஆனால், இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி சமீபத்தில் மம்தா குல்கர்னி விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி தாய்நாடு திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா வந்துள்ளேன். வானத்தில் இருந்து மும்பை நகரை பார்க்கும் போதே என் கண்களில் நீர் திரள தொடங்கி விட்டது. மிகவும் எமோஷனலாக உணருகிறேன் ‘ என்று கூறியிருந்தார்.
இந்தியா திரும்பிய மம்தா குல்கர்னி இப்போது கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ளார். அதோடு, தன்னைச் சந்நியாசியாக மாற்றிக்கொண்டுள்ளார். மம்தா குல்கர்னி பிரயக்ராஜில் ஆசாரியா மகாமண்டலேஷ்வர் மற்றும் டாக்டர். லட்சுமி நாராயண் ஆகியோரைச் சந்தித்தார்.

தொடர்ந்து, கின்னார் ஜுனா அகாரா மடத்தில் மம்தா குல்கர்னியைச் சந்நியாசியாக மாற்றும் சடங்கு நடந்தது. இதில் பிண்ட தானமும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மம்தா குல்கர்னி மகாமண்டலேஷ்வராக மாறி இருக்கிறார். இப்போது மம்தா குல்கர்னி காவி உடையணிந்து ருத்ராட்ச மாலை அணிந்து காணப்படுகிறார். தற்போது, மம்தா குல்கர்னி தனது பெயரை ஸ்ரீ யமை மம்தா நந்த் கிரி என்று மாற்றி விட்டார். அடுத்து வாரனாசி மற்றும் அயோத்தி போன்ற புனித நகரங்களுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தற்போது, மம்தா குல்கர்னிக்கு 52 வயதாகிறது.