மத்திய அரசின் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) புதிய தலைவராக நடிகர் மாதவன் இன்று (செப்டம்பர் 1) நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன்.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், பிரியமான தோழி, விக்ரம் வேதா, இறுதிச்சுற்று என ஏராளமான வெற்றிப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகம் மற்றும் 3 இடியட்ஸ், தனு வெட்ஸ் மனு, ரங் தே பசந்தி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து இந்தி திரையுலகிலும் வெற்றிகரமான நடிகராக அறியப்படுகிறார்.
கடந்த ஆண்டு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணணின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பினை பெற்றது.
அப்படம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 69வது தேசிய விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ளது.
இந்த நிலையில், புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII) சங்கத்தின் புதிய தலைவராக நடிகர் மாதவனை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று நியமித்துள்ளது.
எஃப்டிஐஐ-யின் முன்னாள் தலைவராக இருந்த இயக்குனர் சேகர் கபூரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தற்போது அப்பதவியில் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் வாழ்த்து!
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
“FTII தலைவராக பதவி பெற்றுள்ள நடிகர் மாதவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் பரந்த அனுபவமும் வலுவான நெறிமுறைகளும் இந்த நிறுவனத்தை வளப்படுத்தும். மேலும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்து உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவருக்கு நடிகர் மாதவனும் நன்றி தெரிவித்துள்ளார். அவர், ”உங்களது மரியாதைக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுராக் தாக்கூர்.
எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நிலவில் நிலநடுக்கம்: இஸ்ரோ கண்டுபிடிப்பு!
மும்பை சிறுமி ஆசையாக வைத்த கோரிக்கை: நிறைவேற்றிய ஸ்டாலின்