ராக்கெட்ரி படத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு தலைசிறந்த விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் அனைத்து திரையுலகிலும் சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் நடிகர் மாதவன்.
இவர் 1996ஆம் ஆண்டு வெளிவந்த ’இஷ் ராட் கி சுபா நஹின்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் துணைநடிகராக சினிமாவில் அறிமுகமானார்.
எனினும் 2000 ஆண்டில் பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ’அலைபாயுதே’ படம் தான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது.
கதாநாயகனாக அறிமுகமான தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகராக அடையாளம் காணப்பட்ட நடிகர் மாதவன், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் சவாலான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கையை ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ என்ற பெயரில் இயக்கி நடித்திருந்தார்.
தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்ட விஞ்ஞானியான நம்பியின் வாழ்க்கையை பிரதிபலித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
மேலும் நடிப்பை கடந்து ஒரு இயக்குநராக முதல் படத்திலேயே சிறப்பாக பணியாற்றியுள்ளதாக மாதவன் பலராலும் பாராட்டப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்து ’இந்தியாவின் எடிசன்’ என்று புகழப்படும் மறைந்த பிரபல விஞ்ஞானியான ஜிடி நாயுடுவின் பயோபிக்கில் மாதவன் நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தினை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிறுவனம் நேற்று (ஏப்ரல் 7) வெளியிட்ட அறிவிப்பில், “ மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் ஜி.டி. நாயுடு தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதிசய மனிதன் ஜிடி நாயுடுவின் பல்வேறு சாதனைகள் அடங்கிய வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதனுடன் அட்டகாசமான ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதில் கார் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் பழுதான காரை ஜி.டி நாயுடு பார்த்துக்கொண்டிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ராக்கெட்ரி திரைப்படத்தை இயக்கி நடித்து அதனை ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடுவது வரை கொண்டு சென்ற நடிகர் மாதவன், தற்போது ஜி.டி. நாயுடுவின் படத்திலும் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் தமிழ் சினிமாவினால் அடையாளம் காணப்பட்ட மாதவன் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் நடிக்க ஆர்வம் காட்டுவது பலரையும் ஈர்த்துள்ளது.
அதேவேளையில் மாதவன் ஜி.டி.நாயுடுவாக நடிக்க உள்ள இத்திரைப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
நேற்று வெளியான அறிவிப்பில் இயக்குநர் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் ராக்கெட்ரி படம் போன்று மாதவனே இயக்கி நடிக்க போகிறாரா? அல்லது வேறு யாரும் இயக்குகிறார்களாக என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனினும் உயர்கல்வியை பெறாமல் ’இந்தியாவில் முதல் மின்சார மோட்டாரை தயாரித்தவர்’ என்ற பெருமை கொண்ட தலைசிறந்த அறிவியல் மேதையான ஜிடி நாயுடுவின் மறைக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் சாகசங்கள் இந்த படத்தின் மூலம் உலகிற்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்: பதிவாகாத எப்.ஐ.ஆர்… ஏன்?
1 முதல் 9 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு: தேதி வெளியீடு!