நடிகர் கிங்காங்கின் தாயார் காசி அம்மாள் இன்று (ஆகஸ்ட் 18) அதிகாலை 1.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தமிழ் திரையுலகில் கடந்த 1988-ம் ஆண்டு வெளிவந்த நெத்தியடி படத்தின் மூலம் நடிகர் கிங்காங் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 17. இதைத்தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய கிங்காங், நடனத்திலும் கலக்குவார். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், சில ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார் கிங்காங்.
ஒரு கட்டத்தில் நடிகர் வடிவேலு உடன் இணைந்து போக்கிரி படத்தில் கம்பேக் கொடுத்தார். அந்த படத்தல் தண்ணீர் லாரி ஓட்டுநராக வரும் இவர் வடிவேலுவுடன் சேர்ந்து செய்யும் காமெடி காட்சியை பார்த்து சிரிக்காதவர்களே இல்லை. அதோடு, பாலிவுட்டில் முதல் படத்திலேயே ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு குட்டி வேடத்தில் நடித்திருந்தார் கிங்காங். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளன. பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் கிங்காங் நடத்தி வந்தார்.
நடிகர் கிங்காங்குக்கு இன்று பிறந்த நாள் ஆகும். தனது பிறந்தநாளை கொண்டாட தயாராகி வந்த நிலையில், அவரின் வீட்டில் பெரும் துயரம் நடந்துள்ளது. மகனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் தாயார் காசியம்மாள் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அப்போது, மகிழ்ச்சிகரமாக இருந்த நிலையில், காசியம்மாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே இறந்து போனார். பிறந்த நாளில் தாயை இழந்தது கிங்காங்கை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. காசியம்மாளுக்கு 72 வயதாகிறது. இதையடுத்து, சக நடிகர்களும் ரசிகர்களும் கிங்காங்குக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆவணி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
கார், பைக் ஷோரும் டீலர்களின் வேட்டை… ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர் சிவசங்கர்