நடிகர் கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு ’ஜப்பான்’ படத்தில் அவர் நடித்துள்ள அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் கார்த்தியின் 46வது பிறந்தநாள் இன்று (மே 25). எந்த கதாப்பாத்திரத்தை ஏற்றாலும் சிறப்பாக நடித்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கார்த்தியின் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம்2 வெளியானது.
அதனைத் தொடர்ந்து கார்த்தி ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் பிறந்தநாளான இன்று(மே 25) அதிகாலை ஜப்பான் படத்தின் அதிகாரபூர்வ ரீலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்திருந்தது. தொடர்ந்து “ஜப்பான் யார்” (who’s japan) என்ற அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது.
அமைதியான கடலோர சாலை பயணத்தில் அறிமுக வீடியோவின் முதல் காட்சி அமைந்திருக்கிறது.
தொடர்ந்து ஒரு பாதிரியாரிடம் “ஆண்டவனுடைய அதிசய படைப்புகளில் அவன் ஒரு ஹீரோ’, தொழிலாளி ஒருவர் “முதலாளியாம் முதலாளி, இவன் ஒரு காமெடியன்”,
போலீஸ் அதிகாரி ஒருவர் “அவன் வெரி டர்டி வில்லன்” என்ற வசனங்களுடன் அடுத்தடுத்த காட்சிகள் அமைந்திருக்கின்றன.
இதனையடுத்து ஒரு ரவுடி கும்பல் “யாருடா நீ” என்று கேட்குமிடத்தில் நடிகர் கார்த்தி “ஹா ஜப்பான் மேட் இன் இந்தியா” என்று பதில் சொல்கிறார்.
அடுத்தடுத்து வரும் துப்பாக்கிசுடும் காட்சி மற்றும் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் கார்த்தி கால்பந்து வீரர் மெஸ்ஸின் டி-ஷர்ட் அணிந்து சிரித்துகொண்டே அமர்ந்திருக்கும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் யார் ஜப்பான்? என்ற அறிமுக வீடியோ இதற்கு பதில் அளிக்காமல் கார்த்தி ஹீரோவா, வில்லனா, காமெடியனா என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது.
மோனிஷா
தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நீக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!
தங்கம்விலை அதிரடி வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!