இந்த வருடம் இதுவரை திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பெற்ற படம், கமல்ஹாசன் நடித்து தயாரித்த விக்ரம்.
அவரது திரைப்பயணத்தில் அதிகமான திரைகளில் வெளியான முதல் படம், குறுகிய நாட்களில் மொத்த வசூல் செய்த படம், என பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 100 நாட்களைக் கடந்து 500 கோடி வசூலையும் கடந்தது.
கோவையில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பிரபல கேஜி சினிமாஸ் தியேட்டரில், அதிகபட்சமாக 2 கோடியே 50 லட்சம் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.
உலகம் முழுவதும் விக்ரம் படம் வெளியான வேறு எந்தத் திரையரங்கிலும் இவ்வளவு அதிகமான வசூல் ஆகவில்லை.
தமிழகத்தில் சென்னையில் உள்ள பிவிஆர், கோவையில் உள்ள கேஜி சினிமாஸ், தர்மபுரியில் உள்ள டிமேக்ஸ் டிஎன்சி ஆகிய மூன்று தியேட்டர்களில் மட்டுமே விக்ரம் படம் 100 நாட்களைக் கடந்து ஓடியுள்ளது.
கோவை கேஜி சினிமாஸில் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனையொட்டி ரசிகர்கள், மற்றும் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் கே.ஜி. திரையரங்கில் ரசிகர்கள் பங்கேற்ற விழா நேற்று (செப்டம்பர் 16) நடைபெற்றது.
இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியபோது, ”அடையாளம் தெரியாத குழந்தையாக ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடித்தபோது, போகும் இடங்களிலெல்லாம் நீதானா அந்த புள்ள என்று கேட்பார்கள்.
சந்தோஷமாக இருக்கும். ஆனால், ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை.
10 பேர் கூட கண்டுகொள்ளவில்லையே, என்ற கவலை இருந்ததது. அதை மாற்ற உழைத்தேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போல ‘வந்தாரை வாழ வைப்பது சினிமாவும் தான்’.
63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்தது இந்த சினிமா தான். நான் படிச்சதெல்லாம் கலைஞர்களை தான். நல்ல சினிமாக்களை ஒருபோதும் கை விட்டு விடாதீர்கள்.
நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். என்னை மட்டுமல்ல. நன்றாக நடிக்கும் நடிகர்களை வாழ்த்துங்கள்.
தென்னிந்திய சினிமா பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. வட இந்தியாவில் ‘என்னங்க எல்லாம் அந்தப் பக்கமே ஒளி திரும்பிடுச்சு’ என பயப்படுகிறார்கள்.
புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்றுக் கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.
ராமானுஜம்
“சினிமாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான்” : பாக்யராஜ்
70 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ‘சீட்டா’ சிறுத்தைகள்!