வில்லத்தனம் டூ காமெடி…. ஆல் ஜானரிலும் கலக்கும் ஜான் விஜய்

Published On:

| By uthay Padagalingam

Actor John Vijay

ஜான் விஜய். பேசும் கண்கள். மிரட்டும் குரல். நுணுக்கமான உடல் அசைவுகள். அனைத்துக்கும் மேலே, ஒரு கதாபாத்திரம் எவ்வாறு ரசிகர்களால் உணரப்பட வேண்டுமென்பதைச் சரிவர திரையில் உணர்த்திவிடுகிற தீவிரம். இவையெல்லாம் ஒன்றிணையும் புள்ளியில், ஜான் விஜய்யின் நடிப்பு நம்மை வந்தடையும். Actor John Vijay

1976ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதியன்று தூத்துக்குடியில் பிறந்தவர் ஜான் விஜய். அவ்வூரைச் சார்ந்து சிறு வயது வாழ்வு அமைந்தாலும், பதின்ம வயதில் சென்னைக்கு இடம்பெயர்ந்தது அவரது குடும்பம்.

சென்னை லயோலா கல்லூரியில் எம்.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு. விளம்பர ஏஜென்சிகள், தொலைக்காட்சி சேனல்களில் பணி. சினிமா ஆர்வத்திற்கேற்ற வாய்ப்புகளைத் தேடும் வகையில் பல துறை ஜாம்பவான்களின் அறிமுகம் என்று அதற்கடுத்த சில ஆண்டுகளில் சென்னை மாநகரின் குறிப்பிடத்தக்க பிரபலமாக மாறினார் ஜான் விஜய். அந்த காலகட்டத்தை அவரது பொற்காலம் என்றும் சொல்லலாம்.

Actor John Vijay

ஒவ்வொரு நாளும் புதிய மனிதர்கள், புதிய பணி, புதிதாகச் சில தகவல்கள், நுட்பங்கள் என்று கற்றலும் கற்பித்தலுமாய் கழிந்த காலமது. அப்போது அவருக்கு வாய்த்த நண்பர்களில் பலர், பிற்காலத்தில் அவரது வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களை தீர்மானிப்பவர்களாக விளங்கினார்கள்.

தனது ஆளுமையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்க, அவருக்குத் துணை நின்றார்கள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் தொடர்ந்து பணியாற்றிய அனுபவம், 2000ன் பின்பாதியில் ஜான் விஜய்யை பண்பலை வானொலி நிலைய நிர்வாகத்தைக் கையாள்கிற வாய்ப்பைத் தந்தது. அந்த நேரத்தில் சமகால கலை, கலாசார, பேஷன் நிகழ்வுகளோடு நெருங்கிய உறவு கொண்டவராக அவர் விளங்கினார்.

மிகச்சரியாக, அந்த காலகட்டத்தில் தான் அவரது கல்லூரி காலத் தோழமைகளான புஷ்கரும் காயத்ரியும் ‘ஓரம் போ’ படத்தில் நடிக்கச் சொல்லி அழைப்பு விடுத்தார்கள்.

Actor John Vijay

மேற்கத்திய படங்களில் வருவது போன்று சீரியசும் சிரிப்புமாய் திரையில் வெளிப்படுகிற ‘சன் ஆஃப் கன்’ பாத்திரம் அவருக்குத் தரப்பட்டது. அதில் ஜான் விஜய் பேசிய வசனங்கள் ‘ரசிப்பும் கைத்தட்டலும்’ போன்று எளிதாக ரசிகர்களை வசீகரித்தன.

ஆனாலும், அப்படம் வெளியாக கால தாமதம் ஆனது. அதனால், சரத்குமார் தயாரித்து இயக்கிய ‘தலைமகன்’ அதற்கு முன்னர் ரிலீஸ் ஆனது.

’ஓரம் போ’ தந்த வரவேற்பு மிகப்பெரிது என்பதால், பிறகு ஜான் விஜய் நடிக்கிற பாத்திரங்கள் திரையில் சிறிதளவு தெரிந்தாலும் ரசிகர்களின் ஆதரவு நிறைவானதாக அமைந்தது. ஆனாலும், தனக்கான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர் நிறையவே நிதானம் காட்டினார்.

பொய் சொல்லப் போறோம், ராவணன், அங்காடித்தெரு, தில்லாலங்கடி, வ குவார்ட்டர் கட்டிங் என்று காமெடியாகவும் சீரியசாகவும் மாறி மாறி நடித்து வந்தவரை முழுக்க ‘டெரர்’ வில்லனாக காட்டியது சாந்தகுமாரின் ‘மௌன குரு’.

அதன்பின்னர் வெளியான ‘கலகலப்பு’, ஜான் விஜய்யை ‘சிரிப்பு போலீசாக’ ஆக்கியது. பிறகு, அவருக்கான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

அப்புறமென்ன? ஒவ்வொரு படத்திலும் வேறுபாடு காட்டுகிற வகையில் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் ஜான் விஜய்.

’கபாலி’ படத்தில் அவர் ஏற்ற அமீர் பாத்திரம், குணசித்திர வேடங்களிலும் மிளிர்வார் என்ற நம்பிக்கையைப் பல இயக்குனர்களுக்குத் தந்தது.

அந்த வரிசையில் மேலுமொன்றாக அமைந்தது பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’. அதில் ஜான் விஜய் நடித்த ’கெவின் எனும் டாடி’ பாத்திரம் அவரது திரை வரலாற்றில் மிக முக்கியமானது.
தனித்த தோற்றம், உடல்மொழி, பாவனை என்று நேரில் ஒரு  மனிதரைப் பார்ப்பது போன்ற உணர்வை அப்படத்தில் நமக்குத் தந்தார் ஜான் விஜய்.

Actor John Vijay

அதனாலோ என்னவோ, அப்படம் வெளியான காலகட்டத்தில் அவரைப் புகழ் வெளிச்சம் சூழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்களால் அப்பாத்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழைப் போலவே மலையாளத்திலும் பல கவனிக்கத்தக்க படங்களில் ஜான் விஜய்யின் இருப்பு அமைந்திருக்கிறது. ‘அயோபிண்ட புஸ்தகம்’, ‘லூசிஃபர்’, ‘பிக் பிரதர்’, ‘ஷைலாக்’, ’தங்கமணி’ ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

2016ஆம் ஆண்டு தெலுங்கில் ஜான் விஜய் அறிமுகமானாலும், கடந்த மூன்றாண்டுகளாக ’பாமாகலாபம்’, ’பகவந்த் கேசரி’, ’சலார்’ என்று தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஜான் விஜய்.

கன்னட மொழியில் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், சமீபகாலமாக இந்தியிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

‘பார்க்க வில்லத்தனமா தெரியறாரே’ என ஆரம்பகாலத்தில் ’கமெண்ட்’களை பெற்றாலும், பிற்காலத்தில் அதே நபர்களை ‘அபாரமா சிரிக்க வைக்கிறாரே’ என்று கூற வைத்தவர் ஜான் விஜய். தோற்றத்தையும் குணாதிசயத்தையும் இருவேறாகக் காட்டுகிற வல்லமை இவரது நடிப்புக்கு உண்டு.

பெரிய பட்ஜெட் படம், சின்ன பட்ஜெட் படம் என்ற பாகுபாடு, இவரது பிலிமோகிராஃபியில் தென்படாது. அதேநேரத்தில், எந்த பாத்திரத்திற்கும் பொருத்தமாகத்தான் இருப்பார் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் மேலுயுயர்த்திக்கொண்டே போகிற திறமை இவரிடத்தில் நிறையவே உண்டு.

சினிமாவுக்கு வரும் முன்னரே ‘பாபா’ படத்தையொட்டி ரஜினிகாந்துக்கு கதை சொன்ன அனுபவமும் ஜான் விஜய்க்கு உண்டு. அந்த வகையில் திரையுலகில் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுகிற வல்லமையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

Actor John Vijay

இன்றளவும் விளம்பரப்பட இயக்குனராக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குபவராக, நேர்காணல்களில் திரை பிரபலங்களின் தினசரி வாழ்வை வெளிப்படையாக பகிர்ந்துகொள்பவராக, ஜான் விஜய்யின் பரிமாணங்கள் பலவாறாக நமக்குத் தெரிய வந்திருக்கின்றன.

ஓரிடத்தில் ’தானுண்டு தன் வேலையுண்டு’ என்றிருக்கும் திறமையாளராக வெளிப்படுவதை விட, சட்டென்று சுற்றத்தினர் அறியுமளவுக்குத் தம்மை வெளிப்படுத்துவதே சிறந்தது என்றிருப்பவர்களும் உண்டு. எந்தவொரு கலையிலும் அப்படிப்பட்டவர்களுக்கு முதன்மையான இடம் கிடைக்கும். அதற்கொரு உதாரணம் நடிகர் ஜான் விஜய்.

நடிப்பின் வழியே தொடர்ந்து நம்மை வியப்பில் ஆழ்த்திவரும் இவர், வரும் நாட்களில் தனது படைப்புத்திறமையால் மேலும் பல ஆச்சர்யங்களைத் தரலாம். அப்படியொரு நம்பிக்கையை உருவாக்கவும், அதனைத் தக்க வைக்கவும் பெரும் முயற்சியும் உழைப்பும் தேவை. அப்படியொரு திரைக்கலைஞராக நம் முன்னே திகழ்கிறார் ஜான் விஜய்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share