நடிகர்கள் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு 2’. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு கேமியோ பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிசாசு 2 படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
பல நாட்களுக்கு முன்பே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிசாசு 2 பட வேலைகள் முழுமையாக முடித்து விட்டாலும் ஏதோ சில காரணத்தினால் படம் வெளியாகாமல் இருக்கிறது.
இதற்கிடையில் இயக்குனர் மிஷ்கின் நடிகராக பல படங்களில் நடித்துவிட்டார். நடிகர் விஜய்யின் லியோ படத்திலும் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, மீண்டும் மிஷ்கின் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் என்றும், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிகர் ஜெயராம் நடிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியின் கால்ஷீட் தேதிக்காக தான் மிஷ்கின் காத்துக்கொண்டிருக்கிறாராம். கால்ஷீட் கிடைத்தவுடன் விறுவிறுப்பாக படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!