– உதய் பாடகலிங்கம்
ஜெயபிரகாஷ்… ‘ஆளை பார்த்தா பணக்காரக்களை போல தெரியுதே’ என்று கமெண்ட் அடிக்கும்விதமான தோற்றம். அதே நேரத்துல, ‘மிடில் கிளாஸ் மேன் ஆக ஒரு படத்துல வந்தா ரொம்ப இயல்பா தெரியறாரே’ என்று பாராட்டுகளை அள்ளும்படியான நடிப்பு. நேர்ல சந்திச்சா, ‘நடிக்கிற பாத்திரங்கள் வேற; நான் வேற’ என்கிற தெளிவு தெறிக்கிற மாதிரியான பேச்சு. இது அத்தனையும் சேர்ந்து ‘புதுமாதிரியான நடிகராக இருக்கிறாரே’ என்று ஜெயபிரகாஷை எண்ண வைக்கும்.
இப்போ மயிலாடுதுறை மாவட்டத்துல இருக்குற, ஒருகாலத்துல நாகப்பட்டினம் மாவட்டத்தோட ஒரு பகுதியாக இருந்த சீர்காழியில ஒரு நடுத்தரக் குடும்பத்துல பிறந்தவர் ஜெயபிரகாஷ். அவரோட சிறு வயது வாழ்க்கை முழுக்கவே அந்த ஊரைச் சுத்திதான் அமைஞ்சது.
சின்ன வயசுல இருந்தே ஜெயபிரகாஷுக்கு பிசினஸ் மேல ஆர்வம் அதிகம். அதனால, பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் ஒரு பெட்ரோல் பங்க்ல வேலையில சேர்ந்தார். நான்கைந்து வருஷங்களுக்கு பிறகு, இதே வேலையை சொந்தமா செஞ்சா என்ன அப்படிங்கற யோசனை ஜெயபிரகாஷ் மனசுல உதிச்சது. உடனே, அவர் சென்னைக்கு கிளம்பி வந்தார்.
எண்பதுகளில் சென்னை மயிலாப்பூர் பகுதியில ஒரு பெட்ரோல் பங்க்ல அவர் வேலை செய்து வந்தார். சில வருஷங்களுக்கு பிறகு நண்பர், உறவினர் உதவியோட ஒரு பெட்ரோல் பங்கை வாங்கினார். இவரும் இவரோட ப்ரெண்டும் சேர்ந்து அதை வெற்றிகரமா நடத்துனாங்க. தொண்ணூறுகள்ல இவங்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் எண்ணிக்கை மெல்ல அதிகரிக்க ஆரம்பிச்சது.
அந்த நேரத்துல பால் உற்பத்தி, ட்ரான்ஸ்போர்ட், பில்லியர்ட்ஸ் கிளப்னு வேற வேற விஷயங்களை ரெண்டு பேரும் கையிலெடுத்தாங்க. ஒவ்வொண்ணும் லாபத்தை அள்ளித் தர்ற தொழிலா மாறிடுச்சு. அந்த நேரத்துல, தன்னோட நண்பர்கள் ஞானவேல், காஜா மொய்தீன் மூலமாக சினிமா தயாரிப்புல ஜெயபிரகாஷுக்கு ஆர்வம் உண்டானது. அப்படித்தான் அவர் திரையுலகுல நுழைஞ்சார்.
‘சுட்டிக்குழந்தை’ங்கற தெலுங்கு படத்தை தமிழ்ல டப் செஞ்சு வெளியிட்டார் காஜா மொய்தீன். அந்த படத்தோட வெற்றி, அடுத்தடுத்து படத்தயாரிப்புல ஜெயபிரகாஷையும் அவரோட நண்பர்களையும் ஈடுபட வச்சது. பாண்டியராஜன் டைரக்ட் பண்ண காமெடி படமான ‘கோபாலா கோபாலா’ குறிப்பிடத்தக்க வெற்றியா அமைஞ்சது. அடுத்து இவங்க தந்த ‘பொற்காலம்’ படம் மிகப்பெரிய பேரையும் புகழையும் தந்தது. அது மட்டுமல்லாம, சேரனோட நட்பையும் ஜெயபிரகாஷுக்கு கொடுத்தது. 2001ஆம் ஆண்டு ஜெயபிரகாஷும் ஞானவேலும் சேர்ந்து ‘ஜிஜே சினிமாஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சாங்க. விஜயகாந்த் இரட்டை வேடங்கள்ல நடிச்ச ‘தவசி’யை தயாரிச்சாங்க.
அதுக்குப்பிறகு, யுவன்சங்கர் இசையைக் கொண்டாட வச்ச ‘ஏப்ரல் மாதத்தில்’, பாலு மகேந்திராவோட ‘ஜூலி கணபதி’, ஸ்ரீகாந்த் ஆன்ட்டி ஹீரோவா நடிச்ச ‘வர்ணஜாலம்’, விஷால் அறிமுகமான ‘செல்லமே’, விஜயகாந்தை வித்தியாசமாக காண்பிச்ச ‘நெறஞ்ச மனசு’ படங்களை தயாரிச்சாங்க.
திடீர்னு படத்தயாரிப்புல ஏற்பட்ட நஷ்டங்களால, தான் செஞ்சிட்டு வந்த இதர பிசினஸை கைவிடுற நிலைமைக்கு ஆளானார் ஜெயபிரகாஷ். அதுல இருந்து மீண்டு வர்றதுக்காக போராடிகிட்டிருந்தப்போ, ’நடிக்க வாங்க’ன்னு அவரை கூப்பிட்டார் இயக்குனர் சேரன்.
தயக்கமும் கூச்சமும் துரத்த, முதல்ல அந்த வாய்ப்பை ‘வேண்டாம்’னு மறுத்தார் ஜெயபிரகாஷ். ஆனா சேரனோட பிடிவாதத்தால ‘மாயக்கண்ணாடி’ படத்துல ஒரு ‘டான்’ ஆக நடிச்சார். மனசுல இருக்குறதை வெளியே காட்டிக் கொடுக்காத கண்கள், அடர்ந்த வெள்ளையான தாடி, சிவப்பு நிறம். உடல்மொழியில் தென்படும் கம்பீரம். இதெல்லாம் சேர்ந்து, திரையில ஒரு ‘ரிச்மேன்’ ஆக, ஒரு கேங்க்ஸ்டரா ஜெயபிரகாஷை காட்டுச்சு.மாயக்கண்ணாடி பெரிய வெற்றியைப் பெறலை என்றபோதும் வெள்ளித்திரை, லாடம் படங்கள்ல நடிக்குற வாய்ப்புகள் அவருக்கு கிடைச்சது.
அதன் தொடர்ச்சியா, சமுத்திரக்கனி இயக்குன ‘நாடோடிகள்’ படத்துல நடிச்சார் ஜெயபிரகாஷ். அந்த படத்துல அவர் நடிப்பு, சாதி வெறியில ஆணவக்கொலைகளை நிகழ்த்துற அப்பாக்களை திரையில பிரதிபலிச்சது. அந்த படம் தயாராகிட்டு இருந்தபோதே, பாண்டியராஜ் அறிமுகமான ‘பசங்க’ படத்துல சொக்கலிங்கம் வாத்தியாரா நடிச்சார் ஜெயபிரகாஷ். இந்த இரண்டு படங்களும் அவரோட திரை வாழ்க்கையில திருப்புமுனையா அமைஞ்சது.
45 வயசுல, நடிப்புங்கற தொழில்ல பயத்தோட காலடி எடுத்து வச்ச ஜெயபிரகாஷ், 2010க்கு பிறகு தமிழ் திரையுலகில சக்சஸ்புல் கேரக்டர் ஆர்ட்டிஸ்டா மாறினார்.
வம்சம் படத்துல வன்மம் கொண்ட வில்லனா அருள்நிதியோட நடிச்சவர், ‘நான் மகான் அல்ல’ படத்துல ஒரு சாதாரண மனிதனா, நாயகன் கார்த்தியோட அப்பாவா திரையில தெரிஞ்சார். யுத்தம் செய் படத்துல ஜெயபிரகாஷ் நடிச்ச டாக்டர் பாத்திரம், தீவிரமான தமிழ் ரசிகர்கள் அவரைக் கொண்டாட வச்சது.
’ரௌத்திரம்’ படத்துல ஜீவா, பிரகாஷ்ராஜுக்கு நடுவுல இடம்பிடிச்சு நம்மை சிரிக்க வச்சார். மங்காத்தா படத்துல த்ரிஷாவோட அப்பாவா வந்து ரசிகர்களை பரிதாப்பட வச்சார். நாயகன் நாயகியின் அப்பா, அப்படியில்லன்னா அவங்களுக்கு தெரிஞ்ச ஒரு உறவினர், அதுவும் இல்லேன்னா வில்லன் என்று விதவிதமான பாத்திரங்கள்ல வலம் வந்தார் ஜெயபிரகாஷ்.
சமர், ஆதலால் காதல் செய்வீர், பிரியாணி, இது கதிர்வேலன் காதல், தெகிடி, தனி ஒருவன்னு தொடர்ந்து பல படங்கள்ல இடம்பிடிச்சார்.இந்த காலகட்டத்துல தெலுங்குல ‘கார்த்திகேயா’, ‘ரன் ராஜா ரன்’ படங்கள்ல தலைகாட்டுனார் ஜெயபிரகாஷ். அந்த படங்களோட வெற்றி, அவரைப் பல தெலுங்கு படங்கள்ல இடம்பெற வச்சது. அதுல முக்கியமான படமா ‘சர்ரனோடு’ (Sarrainodu) அமைஞ்சது. அல்லு அர்ஜுன், ஸ்ருதி ஹாசன், பிரகாஷ்ராஜோட சேர்ந்து அதுல நடிச்சார்.
அந்த படத்தோட வெற்றியால, தமிழை விட தெலுங்கு படங்கள்லதான் பார்க்க முடியுது’ன்னு சொல்ற அளவுக்கு ஒருகாலகட்டத்துல தெலுங்கு படவுலகுல சக்சஸ்ஃபுல் கேரக்டர் ஆர்ட்டிஸ்டா ஆனார் ஜெயபிரகாஷ்.
அதேமாதிரி மலையாளத்துல ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘பட்டம் போலே’, ‘ஊழம்’னு பல வெற்றிப்படங்கள்ல இடம்பிடிச்சிருக்கிறார். சில கன்னடப் படங்கள்லயும், தெலுங்கு வெப்சீரிஸ்கள்லயும் நடிச்சிருக்கார். சமீபத்துல வெளியான ‘மெய்யழகன்’ படத்துல அரவிந்த் சாமியோட அப்பாவா, அறிவுடை நம்பிங்கற பாத்திரத்துல நடிச்சிருந்தார் ஜெயபிரகாஷ். கண் கலங்க வைக்குற நடிப்பை அதுல தந்திருந்தார்.
இளம் வயசுல, ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனா அடையாளப்படனும்னு நினைச்ச ஜெயபிரகாஷ், திடீர்னு வந்த ஒரு வாய்ப்பால நடிகர் ஆனார். அடுத்தடுத்த வாய்ப்புகளை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டதால, இன்னிக்கு ஒரு ‘ஸ்டாரா’ திரையுலகில் வலம் வருகிறார். எடுத்துக்கிட்ட வேலைக்கு சின்சியரா இருக்கணும்கற எண்ணமும், அதைச் சாதிக்கறதுக்கு தேவையான அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும் அதன் பின்னணியில இருக்குது.
இப்பவும் ‘அணையாம இருக்குற நெருப்பு’ மாதிரி அதை தக்க வச்சுக்கிட்டே இருக்குறதால தென்னிந்திய சினிமாக்கள்ல தொடர்ந்து வெற்றிகரமான நடிகராக திகழ்கிறார் ஜெயபிரகாஷ். தன்னை மிடில்கிளாஸ் மேனா, ரிச் மேனா திரையில காட்டுற இயக்குனர்கள், இனி சமூகத்தோட அடித்தட்டு மக்கள்ல ஒருவராகவும் காட்ட வேண்டும் என்பது இவரது விருப்பங்களில் ஒன்று.
2கே கிட்ஸ்களோட வருகைக்குப் பிறகு, கேரக்டர் ஆர்ட்டிஸ்டா இருக்கறவங்களையும் ரசிகர்கள் கொண்டாடுவாங்கங்கற நிலைமையை உருவாக்கின கலைஞர்கள்ல இவரும் ஒருவர், ஜெயபிரகாஷ். அது மட்டுமல்லாம, தோல்விகளைக் கண்டு துவண்டு போகாம ஐம்பதுகள்லயும் ஒரு மனிதன் ஜெயித்துக் காட்டலாம் என்பதற்கான உதாரணமாகவும் விளங்குகிறார்.
சினிமா கலைஞர்கள் மட்டுமல்ல, அனைவரும் பின்பற்ற வேண்டிய பாதை இவருடையது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்கள் : எடப்பாடியை அட்டாக் செய்த ஸ்டாலின்
படுமோசமாக உள்ள டெல்லியின் காற்று… பொதுமக்கள் அவதி!