இளவரசு, தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாணியை வகுத்துக்கொண்ட குணசித்திர நடிகர்களில் இவருக்குத் தனியிடம் உண்டு.மதுரை மேலூரைச் சேர்ந்தவர் இளவரசு.
பள்ளி, கல்லூரி படிப்புக்குப் பிறகு புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டு சென்னை வந்தவர். வண்ணப் புகைப்படங்களை அச்செடுக்கும் பணியில் ஈடுபட்டவர், அதன் தொடர்ச்சியாக சினிமா புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவியிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
அப்போது கற்றுக்கொண்ட பாடங்கள், அவரை ‘சினிமாவே எதிர்காலம்’ என்று எண்ண செய்தது. அதன் காரணமாக, ஒளிப்பதிவு பக்கம் அவரது கவனம் திரும்பியது.எண்பதுகளின் தொடக்கத்தில், பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்தார் இளவரசு.
ஒரு கைதியின் டைரி, மண் வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், கொடி பறக்குது என்று பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார் இளவரசு. அந்தப் படங்களில் சிறு பாத்திரங்களில் அவர் நடிக்கவும் செய்திருக்கிறார்.சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிராஜாவின் படங்களில் பணியாற்றிய அனுபவம், ‘கருத்தம்மா’ படத்தில் ஒளிப்பதிவாளராக இளவரசு அறிமுகமாகக் காரணமாக அமைந்தது.
தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி, பெரியதம்பி, நினைத்தேன் வந்தாய், இனியவளே, மனம் விரும்புதே உன்னை, வீரநடை படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்தார். வழக்கமான கமர்ஷியல் படம் என்பதைத் தாண்டி, இப்படங்களின் ஒவ்வொரு பிரேமிலும் இளவரசுவின் அழகியல் சிந்தனை பளிச்சிடுவதைக் காண முடியும்.
‘நினைத்தேன் வந்தாய்’ படத்தின் ஒளிப்பதிவைக் கண்ட பாலு மகேந்திரா, இளவரசுவைப் பாராட்டியது அதற்கான ஒரு சான்று. 2000வது ஆண்டு சபாஷ், ஏழையின் சிரிப்பில், லவ் மேரேஜ் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இளவரசு, பிறகு ஒளிப்பதிவுக்கான வாய்ப்புகள் வராத காரணத்தால் நடிகராக உருமாறினார்.
இடைப்பட்ட காலத்தில் பசும்பொன், பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனாலும், விஜயகாந்தின் ‘தவசி’ படமே அவரை ரசிகர்களிடத்தில் நன்றாக அறிமுகப்படுத்தியது. பிறகு ரெட், ஜெமினி, கார்மேகம், பகவதி, அன்பே சிவம், சாமி, ஜெயம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் இளவரசு.
அடுத்தடுத்த ஆண்டுகளில் பல படங்களில் அவர் முகம் காட்டியபோதும், அவரது நடிப்பு முத்திரை பதிக்கும் விதமாக வெளியானது ராஜ்கிரணோடு அவர் நடித்த ‘தவமாய் தவமிருந்து’. அதன் தொடர்ச்சியாக, அக்காலகட்டத்தில் குணசித்திர பாத்திர வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.
அதேநேரத்தில், ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’யில் வடிவேலு உடன் அவர் வந்துபோனது குழந்தைகளையும் சிரிக்க வைத்தது. அதில் நடித்த ‘மங்குனி’ அமைச்சர் பாத்திரம் இன்றும் மீம்ஸ்களை ஆக்கிரமிக்கிறது. சென்னை 600028 படத்தில் வரும் சலூன்கடைக்காரர் மனோகர் பாத்திரம், நிஜ வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்களை நினைவூட்டியது.
வில்லன், நாயகனுக்கு நண்பன், நாயகன் நாயகியின் தந்தை, தள்ளாடும் முதியவர் என்று விதவிதமான பாத்திரங்களில் வெவ்வேறுவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிற பாத்திரங்கள் இளவரசுவுக்கு வாய்த்தன. அந்த வரிசையில், மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் படங்கள் கடைக்கோடி ரசிகனிடத்திலும் அவரைக் கொண்டு போய் சேர்த்தன.
மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக என்று அந்தப் பட வரிசை அனைத்தும், இன்றும் இளவரசுவைப் பட்டிதொட்டியெங்கும் புகழோடு உலா வரச் செய்கின்றன. திரையில் ஒருவர் சீரியசாக தோற்றமளித்து, அதனைப் பார்த்து ரசிகர்கள் சிரிப்பதென்பது மிக அரிதாக நிகழும் சம்பவம்.
களவாணி உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பின் மூலம் அதனை நிகழ்த்தியவர் இளவரசு. அது மட்டுமல்ல, ‘கலகலப்பு’ படத்தில் வரும் அமிதாப் மாமா பாத்திரம் போன்று அவரால் நேரடியாகவும் ரசிகர்களைக் கிச்சுகிச்சு மூட்டவும் முடியும். சதுரங்க வேட்டை படத்தில் மண்ணுளிப்பாம்பு வாங்கி ஏமாறும் பேராசைக்கார மனிதராகத் தோன்றி பரிதாபத்தை ஊட்டவும் முடியும். அதுதான் இளவரசுவின் நடிப்புத்திறனுக்கான சான்று.
ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 10 படங்களாவது நடித்துவிட வேண்டுமென்பதைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தி வரும் இளவரசு, தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினி, கமல் முதல் அதற்கடுத்த இரு தலைமுறைகளோடு இணைந்து நடித்தவர்.
இனி வரும் ஜென் ஸீ தலைமுறையோடும் கைகோர்க்கிற மனப்பக்குவம் இளவரசுவுக்கு உண்டு என்பதை, சமூக ஊடகங்களில் தவழும் அவரது பேட்டிகள் சொல்லும். ஒளிப்பதிவாளர், நடிகர் என்பதைத் தாண்டி எழுத்தாளர், சமூக விமர்சகர் என்று அவருக்குப் பல முகங்கள் உண்டு. இயக்குனராக அவதாரமெடுக்கிற காலம் வெகுதொலைவில் இல்லை என்பதையே அவரது பல பேட்டிகள் நமக்கு உணர்த்துகின்றன.
எதிர்வரும் காலம், இளவரசு எனும் தனித்துவமான குணசித்திர நடிகரின் அந்த முகங்களையும் நமக்கு தெரியப்படுத்தும் என்று நம்புவோம்!
– உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… பாஜகவை பின்னுக்கு தள்ளிய ஹேமந்த் சோரன்