நடிகர் ரா.சங்கரன் மறைவிற்கு பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குனருமான ரா.சங்கரன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று (டிசம்பர் 14) காலமானார். அவருக்கு வயது 92.
கடந்த 1974-ஆம் ஆண்டு சிவகுமார் நடிப்பில் வெளியான ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு படத்தை இயக்கி திரையுலகிற்கு அறிமுகமானார் ரா.சங்கரன். தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி உள்ளிட்ட ஏழு படங்களை இயக்கியுள்ளார்.
அதேபோல மெளனராகம், ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் மெளனராகம் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக சந்திரமெளலி கதாபாத்திரத்தில் சங்கரன் நடித்தது ஹிட் ஆனது.
காபி ஷாப்பில் நடிகர் கார்த்திக்கும், ரேவதியும் பேசிக்கொண்டிருக்கும் போது, சங்கரன் வருவார். அப்போது, கார்த்திக், ‘சந்திரமெளலி…மிஸ்டர் சந்திர மெளலி’ என்று அவரை அழைக்கும் காட்சிகள் பலராலும் ரசிக்கப்பட்டது.
கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்த ரா.சங்கரன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு இயக்குனர் பாரதிராஜா, நடிகர் கயல் தேவராஜ் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சங்கரன் மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள இரங்கல் பதிவில், “எனது ஆசிரியர் இயக்குனர் ரா.சங்கரன் சார் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ள பாதிப்பு: சாலையோர பெண் வியாபாரிகளுக்கு உதவும் அறக்கட்டளை!