நடிகர் துருவ் விக்ரமிற்கு கூடுதல் சம்பளம்?: லைகா மீது குற்றச்சாட்டு!
தமிழ் சினிமாவில் இளம் வயதுடைய கதாநாயகன் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம். இவர் 2019 ஆம் ஆண்டு ’ஆதித்யவர்மா’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ’மகான்’ படத்தில் அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெறாத படமாகும்.
அதன் பின் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக 2021 ஜனவரி 28 ஆம் தேதி தகவல் வெளியானது.
கொரோனா பொது முடக்கம், உதயநிதி ஸ்டாலின் விருப்பப்படி மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்க ஒப்புக்கொண்டதால் அந்தப் படத்தை உடனடியாக தொடங்க முடியவில்லை.
தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க துருவ் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது, அதற்காக அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் தமிழ் சினிமாவில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் டாடா. இப்படம் வெளியான இருவாரங்களில் அப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே.பாபுவை தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தம் செய்தது லைகா நிறுவனம்.
கதாநாயகன் யார் என்பது அப்போது கூறப்படவில்லை. தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை லைகா தயாரிக்க கணேஷ் கே.பாபு இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமாவில் நடிகர்களின் வியாபார மதிப்பை பொறுத்து சம்பளம் பேசாமல், பெருமைக்காக உச்ச நடிகர்களின் வியாபார மதிப்பைக் கடந்து கூடுதலாக சம்பளத்தை கொடுத்து கால்ஷீட் வாங்குகிறது லைகா நிறுவனம்.
அதனால்தான் அவர்களது தயாரிப்பில் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு லைகா மீது கூறப்பட்டு வருகிறது.
துருவ் விக்ரம் நடித்த முதல் படமே இரண்டாக வெளியானது. அவர் நடிக்கும் மூன்றாவது படம் தொடங்கவே இல்லை.
இந்தநிலையில் நான்காவது படத்திற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயித்திருக்கிறது லைகா நிறுவனம்.
நீண்ட காலமாக நடித்துக்கொண்டிருக்கும் அதர்வா, கௌதம் கார்த்திக் போன்ற வாரிசு நடிகர்கள் இன்று வரை வாங்க முடியாத சம்பளத்தை துருவ் விக்ரம் வாங்கும் நிலைக்கு அவரை லைகா நிறுவனம் உயர்த்திப் பிடித்திருக்கிறது.
இதனால் மற்ற இளம் கதாநாயகர்களின் சம்பளம் அதிகரிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
இராமானுஜம்
ரம்மி விளையாட்டுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி – நிர்மலா சீதாராமன்
சென்னை: நடமாடும் வாகனங்கள் மூலம் தக்காளி விற்பனை!
அமலாக்கத்துறை புலன் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது: துஷார் மேத்தா வாதம்!