நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ’நானே வருவேன்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு இன்று (ஆகஸ்ட் 31) தெரிவித்துள்ளது.
தன் சகோதரர் தனுஷை வைத்து ’துள்ளுவதோ இளமை’, ’காதல் கொண்டேன்’, ’புதுப்பேட்டை’ உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன்.
இந்த கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூலை 27ஆம் தேதி, வெளியானது.
இதைத் தொடர்ந்து, ’நானே வருவேன்’ படத்தின் இரண்டு புதிய போஸ்டர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகின. இதை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
அப்போது, ‘இப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும்’ என்ற அறிவிப்பையும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ‘நானே வருவேன்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது.
ஏற்கெனவே ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் இப்படத்தின் அறிவிப்பாலும் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டர்கள்!