முன்னணி நடிகராக மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட்டுக்கும் சென்று தமிழ் சினிமாவுக்கு அடையாளம் கொடுத்துள்ள நடிகர் தனுஷ் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
விமர்சனங்களை வெற்றியாக மாற்றிய வித்தகன்!
தனது 19 வயதில் 2002ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த தனுஷை விமர்சிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. நோஞ்சான் உடம்பு, அப்பா, அண்ணனின் ஆதரவில் வந்தவர் என்று அவரை நோக்கி வீசப்பட்ட விமர்சனங்கள் ஏராளம். ஆனால் தன்னை நோக்கி வந்த விமர்சனங்களை எல்லாம் வீசி எறிந்துவிட்டு வெற்றியை நோக்கி மட்டுமே நடைபோட்ட வித்தகன் தனுஷ்.

கோலிவுட்… பாலிவுட்… ஹாலிவுட்..!
வெளியானபோது யாரும் கண்டுக்கொள்ளாத அவரது புதுப்பேட்டை திரைப்படம் இன்று சினிமா ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் தனுஷ் என்ற நடிகரின் நடிப்பை வெளிக்காட்டியதுடன், வெற்றியை மட்டுமே இறுக்கமாக பற்றிகொண்டவை. ஆரம்ப காலங்களில் தான் நடித்த படங்களுக்காக விமர்சிக்கப்பட்டவர், இன்று தனது அசுரத்தனமான நடிப்பால் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுள்ளார். 2013 ல் ராஞ்சனா படம் மூலம் இந்திக்கு சென்ற தனுஷ், ’ஷமிதாப்’, சமீபத்தில் வெளியான ’அந்தராங்கி ரே’ ஆகிய படங்களின் மூலம் பாலிவுட்டிலும் தன் முத்திரையை பதித்தார். சரி பாலிவுட் போய்விட்டார் ஹாலிவுட்டுக்கு போய் விடுவாரா என்று கேட்டவர்களுக்கு, ’தி எக்ஸ்ராடினரி ஜெர்னி ஆஃப் ஃபகிர்’, ’தி கிரே மேன்’ போன்ற படங்களில் நடித்து ஹாலிவுட் ஆடுகளத்திலும் தனது கொடியை என்று தனுஷ் பறக்கவிட்டுள்ளார். ஹாலிவுட் ஹீரோக்களை வியந்து பார்த்து வந்த நமக்கு, இன்று தமிழ் நடிகரை அந்த ஹாலிவுட் ஹீரோக்கள் புகழ்வது வியப்பு தான், ஆனால் அதை விட ஆழமாக தெரிவது தனுஷ் என்ற கலைஞனின் அசராத உழைப்பு.

விருதுகளுக்கு பிடித்த பன்முக கலைஞன்!
தனுஷின் அயராத உழைப்புக்கு இந்தியாவின் உயர்ந்த திரைப்பட விருதான ராஜாட் கமல் எனப்படும் தேசிய விருது 2 முறை கிடைத்தது. மேலும் தயாரிப்பாளராகவும் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளார் தனுஷ். இது மட்டுமின்றி சிறந்த இயக்குநராக, பின்னணி பாடகராக, பாடலாசிரியராக என தான் கால் வைத்த இடங்களில் எல்லாம் தனது முத்திரையை பதித்து ஏராளமான விருதுகளை வென்று மலைபோல் அடுக்கி வைத்துள்ளார் தனுஷ்.

பாடம் கற்பிக்கும் வாத்தி!
தங்களது பலவீனங்களால் அவமானப்படுத்தப்படும் ஒவ்வொருவருக்கும், அதனை பலமாக மாற்றினால் உலகை தன்வசப்படுத்தலாம் என்று தனது வாழ்க்கையால் பாடம் நடத்தி கொண்டிருக்கிறார் வாத்தி தனுஷ். தான் கற்ற அனுபவ பாடத்தால் இன்று தலைசிறந்த நடிகராக உருவெடுத்திருக்கும் தனுஷ் இன்னும் பல வெற்றிகள் கண்டு தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ்
கிறிஸ்டோபர் ஜெமா