தமிழ் மற்றும் மலையாள சினிமா படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலா.
தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். கடந்த 2010ம் ஆண்டு பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு.
தொடர்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பிறகு, டாக்டர் எலிசபெத்துடன் பாலா திருமணம் செய்யாமல் வாழ்ந்தார். ஆனால், இருவரும் பிரிந்து விட்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் பாலா மீது அவரது முதல் மனைவி, தன்னையும் தனது மகளையும் வழிமறித்து பாலா தொல்லை கொடுப்பதாக புகார் அளித்தார். இதனால், போலீசாரால் பாலா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் வெளி வந்த பாலா அளித்த பேட்டியில், “தனது குடும்ப சொத்தில் இருந்து எனது பங்காக ரூ. 250 கோடி சொத்து வந்துள்ளது. இதை அறிந்து கொண்ட சிலரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது மாமா மகளான சென்னையை சேர்ந்த கோகிலாவை பாலா இன்று (அக்டோபர் 23) திடீர் திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் எர்ணாகுளம் அருகேயுள்ள கோயில் ஒன்றில் நடந்தது.
இந்த திருமணம் குறித்து ஊடகங்களிடம் பாலா கூறுகையில், “எனக்கு சமீபத்தில் கல்லீரல் அறுவை சிகிச்சை நடந்தது. இதனால், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். தற்போது,உடல் நிலை நல்ல நிலையில் உள்ளது. எனக்கு ஆதரவாக ஒருவர் வேண்டுமென்பதால் மூன்றாவதாக திருமணம் செய்தேன்’ என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்