அழகம்பெருமாள். சமகாலத்தில் தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க குணசித்திர நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர். ஒரேநேரத்தில் கிராமத்தானாகவும் நகரத்தானாகவும் தோற்றம் தருகிற வல்லமை அவரிடத்தில் உண்டு. குறிப்பாக, கிராமத்தில் இருந்து நகரங்களை நோக்கி இடம்பெயர்பவர்களைப் பிரதிபலிக்கிற ஒரு சோறு பதமாக, திரைக்கதையில் இவரைப் பயன்படுத்த முடியும். Actor Azhagam Perumal
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் அழகம்பெருமாள். அரசுப் பணியில் இருக்கிற குடும்பத்தினர், உறவினர்கள் சூழ அமைந்தது இவரது பால்ய காலம். அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் வேறாக இருந்தாலும், பள்ளி கல்லூரி காலத்தில் உடன் படித்த நண்பர்களால் பல வகைப்பட்ட வாழ்வனுபவங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அழகம்பெருமாளுக்குக் கிடைத்தது.
குடும்பத்தினர் விருப்பத்திற்கேற்ப பொறியியல் படித்தவர், தனது தேடல் சினிமா திரையரங்குகளில் இருந்ததைக் கண்டார். அடையாறு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பினார்.
எண்பதுகளின் இறுதியில் சினிமா ஆசைகளுக்கு எத்தகைய வரவேற்பு உறவினர்களிடமும் சுற்றத்தினரிடமும் கிடைக்கும். அதையும் மீறிச் சென்னை வந்தார். திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்தபோது, அவர் கையை தங்கப்பதக்கம் நிறைத்திருந்தது.
பிறகு, இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார் அழகம்பெருமாள். ‘தளபதி’ அவர் பணியாற்றிய முதல் திரைப்படம். ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர் வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். மேற்சொன்ன படங்களில் சில பாத்திரங்கள் நெல்லை, நாஞ்சில் நாட்டுத் தமிழை அள்ளியிறைத்ததன் பின்னால் நின்றவர் இவரே.
மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்கிற அடையாளம், அழகம்பெருமாளுக்கு முதல் பட வாய்ப்பைச் சிலகாலத்தில் பெற்றுத் தந்தது.
முதல் படம்! Actor Azhagam Perumal

’முதன்முதலாக’ என்ற படத்தை அவர் முதன்முறையாக இயக்கினார். அரவிந்த் சுவாமி, கரிஷ்மா கபூர் நடித்த அந்த திரைப்படம் முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் நின்றுபோனது.
பிறகு விஜய், சிம்ரன் நடித்த ‘உதயா’ திரைப்படத்தை ஆக்கினார் அழகம்பெருமாள். சில காரணங்களால் அந்தப் படமும் முடங்கியது. Actor Azhagam Perumal
அதையடுத்து, மணிரத்னம் தயாரிப்பில், கார்த்திக் ராஜா இசையில் மாதவன், ஜோதிகா, டெல்லி குமார், கலைராணி, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘டும்டும்டும்’ படத்தை இயக்கினார். ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் என்று ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் பட உள்ளடக்கத்தைக் கொண்ட அப்படைப்பு கொஞ்சம் வித்தியாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்கு தந்தது.
அந்த வெற்றியை அடுத்து மீண்டும் அடுத்த பட வாய்ப்புகள் அழகம்பெருமாளை அலைக்கழித்தன. அப்போது ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில் ‘ஜூட்’ படத்தை இயக்குகிற வாய்ப்பு அவரை வந்து சேர்ந்தது. அப்படம் கவனிப்பைப் பெறாமல் போனது.
சிம்ரனுக்கு திருமணம் என்ற செய்தி வெளியானபிறகு, அவசர அவசரமாக ‘உதயா’ பட வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. 2004ஆம் ஆண்டு வெளியான அப்படமும் கவனிக்கப்படாமல் போனது.
நடுத்தர வயது பாத்திரங்களுக்கான முதல் சாய்ஸ்!
ஒரு வெற்றிகரமான இயக்குனராக வேண்டுமென்ற வேட்கையுடன் இருந்த அழகம்பெருமாளை அந்த தோல்விகள் நிச்சயம் பாதித்திருக்கும். ஆனாலும், தமிழ் திரையுலகம் அவரது வாழ்வில் இன்னொரு கதவைத் திறந்து வைத்தது.
‘புதுநெல்லு புதுநாத்து’ படத்தில் தலைகாட்டிய அழகம்பெருமாளை, தான் இயக்கிய ‘அலைபாயுதே’வில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் மணிரத்னம். அப்படத்தில் அந்த பாத்திரத்திற்குக் கிடைத்த வரவேற்பு, மேலும் பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. இயக்குனராக மிளிர்வதற்காக அவற்றை நிராகரித்தவர், ஒருகட்டத்தில் ‘நடித்து பார்ப்போமே’ என்று களமிறங்கினார்.
அந்த ஆரம்பம் அமர்க்களமாகத் திகழும் என்பதைப் பறைசாற்றியது, செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’. அதில் தமிழ்செல்வன் என்ற பாத்திரத்தில் நடித்தார் அழகம்பெருமாள்.
ஒரு காட்சியில் தன்னிடம் வேலை செய்யும் தனுஷை வாய் நிறையத் திட்டிவிட்டு, சட்டென்று பின்னால் திரும்பி ‘செந்தமிழ் கவிஞன் நான்..’ என்று வசனம் பேசத் தொடங்குவார். அப்போதுதான், திரை போடப்பட்ட மேடையில்தான் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் என்பது நமக்கு விளங்கும்.
அந்த ஒரு காட்சி போதும், அழகம்பெருமாள் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பதைச் சொல்ல..!
பிறகு ‘கற்றது தமிழ்’ படத்தில் தமிழாசிரியராக, ‘அலிபாபா’வில் போலீஸ் அதிகாரியாக, ’கண்டேன் காதலை’ படத்தில் நாயகியின் தந்தையாகத் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார்.
அவரது நடிப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றது ‘ஆயிரத்தில் ஒருவன்’. ரீமா சென் உடன் அவர் இணைந்து நடித்திருந்த காட்சிகள், அளவெடுத்து தைத்த சட்டையை அணிந்துகொண்டு ‘பிட்’டாக தோன்றுவது போன்றிருந்தது. Actor Azhagam Perumal
பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்பறவை, சமர், யட்சன், தரமணி, அடங்க மறு, கமலி ஃப்ரம் நடுக்காவிரி என்று அவர் நடிப்பில் முத்திரை பதித்த படங்கள் கணிசம்.
‘அண்டே சுந்தரானிகி’ படம் மூலமாக, தெலுங்கிலும் இவர் கால் பதித்தார்.
சமகாலச் சமூகம், அரசியல், இலக்கியம் குறித்த புரிதல் கொண்ட சினிமா கலைஞனாக அறியப்படுபவர் அழகம்பெருமாள். சமீபகாலமாக, மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதனால், படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ‘செலக்டிவ்’வாகவே ஒப்புக்கொள்கிறார். Actor Azhagam Perumal
வசீகரிக்கிற, வாஞ்சையை வீசுகிற, மிரட்டுகிற, வருந்துகிற தொனியைக் கண்களில் வெளிப்படுத்துகிற வல்லமை இவரது நடிப்பில் தென்படும். ஒரு இயக்குனராக இருந்த காரணத்தால், படத்தயாரிப்புக்கு என்னென்ன வகையில் உதவிகரமாக இருக்க முடியும் என்பதையும் உணர்ந்தவர். அதனால், நடுத்தர வயது பாத்திரங்களுக்கான முதல் சாய்ஸ் ஆக விரும்பப்படும் நடிகர்களில் முதன்மையவராகத் திகழ்ந்து வருகிறார்.
அனைத்தையும் தாண்டி ‘என்னடே’ என்று நாஞ்சில் நாட்டுத் தமிழை கம்பீரமாக ஒலிக்கிற அந்த அழகை, இவரைவிட இன்னொருவரிடத்தில் காண்பது அபூர்வம்.
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையில் நம்மை மகிழ்வித்து வருகிற அழகம்பெருமாள், வரும் நாட்களில் நடித்தும் படத்தை ஆக்கியும் நம் ரசனைக்கு மென்மேலும் தீனி போட வேண்டும்..! Actor Azhagam Perumal