தம்பி ராமையாவுக்கு மகனாக பிறந்து நடிகர் அர்ஜூனுக்கு மருமகனாகியுள்ள உமாபதியை வைத்து ஏழுமலை 2 படத்தை அர்ஜூன் தயாரித்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அர்ஜுன். இவர், கடைசியாக லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்து, பிரமாண்டமாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் அர்ஜுன் சேர்ந்து நடித்து வருகிறார்.
நடிகர் அர்ஜுனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான உமாபதியை வைத்து புதிய படத்தை இயக்க தற்போது, நடிகர் அர்ஜூன் திட்டமிட்டுள்ளார்.
அர்ஜுன் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஏழுமலை.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் உமாபதி ஹீரோவாக நடிக்கிறார் என்றும், அந்த படத்தை அர்ஜுன் இயக்கி, தயாரிக்கப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
இதற்கிடையே, சமீபத்தில் அர்ஜுன் தன்னுடைய மருமகன் மற்றும் தம்பி ராமையாவை அழைத்து கொண்டு திருமயம் அருகே உள்ள இராராபுரம் என்ற ஊரில் இருக்கும் திருவேட்டை அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அங்கு அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவுக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர், அர்ஜுன் குடும்பத்தினர் கோவில் அருகிலுள்ள அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர். அப்போது, தம்பி ராமையா திருக்குறளை சுட்டிக் காட்டி குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர் : அமலாக்கத் துறைக்கு உத்தரவு!
முல்லை பெரியாறு அணை: பீதியை கிளப்பிய சுரேஷ் கோபி… செல்வப்பெருந்தகை கண்டனம்!